பள்ளிமுனையில் கடற்படை வசம் உள்ள காணிகள்: செல்வம் எம்.பி விடுத்துள்ள எச்சரிக்கை
கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் போராட்டம் வெடிக்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று (14) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
முப்படையினர் வசமுள்ள காணிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுரகுமார ஆட்சிக்கு வந்ததன் பின் முப்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாக தெரிவித்து இருந்தார். இருந்த போதிலும் பல இடங்களில் அது நடைபெறவில்லை.
இதேவேளை மன்னார் பள்ளிமுனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள தனியார் காணிகள் குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் பேசி இருந்தோம். ஜனாதிபதிக்கும் இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பி இருந்தோம்.
ஆனால் தற்போது இந்த கடற்படை முகாம் அமைந்திருக்கும் காணிகளை வருகின்ற 20ஆம் திகதி அளவீடு செய்யப் போவதாக துண்டுபிரசுரம் ஒட்டப்பட்டு இருக்கிறது. எனவே நாங்கள் அதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. மக்கள் இதற்கு நிச்சயம் போராடுவார்கள்.
உடன் நிறுத்தப்பட வேண்டிய நடவடிக்கை
இந்த நிலையை மாற்றுவதற்கு இது சம்பந்தமாக நாங்கள் ஜனாதிபதிக்கும் தெரிவிக்க இருக்கிறோம். அதேபோன்று அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் நாங்கள் இது சம்பந்தமான முறைப்பாடு செய்ய இருக்கிறோம். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அத்தோடு பள்ளிமுனை மக்களின் காணிகளை அவர்களிடமே பகிர்ந்தளிக்க வேண்டும். கடற்படை அதை அபகரிக்கும் செயல்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் மக்கள் போராட்டம் வெடிக்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டாம் என்பது எங்களுடைய கோரிக்கையாக உள்ளது.
எனவே ஜனாதிபதியிடம் இந்த செயற்பாட்டை நிறுத்துமாறு வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் நாங்கள் பேச இருக்கிறோம் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
