பதுளையில் மலையக மக்களின் காணி உரிமைப் போராட்டம்
மலையக மக்களின் அடிப்படை வாழ்வுரிமைகளை வலியுறுத்தி பதுளை நகரில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் நேற்று(03.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தலைமுறைகளாக தோட்டங்களில் உழைத்து வந்தும், தமக்கென சொந்தக் காணி இன்றி வாழ்ந்து வரும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரளாக இதில் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தங்களது முக்கிய கோரிக்கைகளாக சொந்தக் காணி உரிமை வழங்குதல், நிலையான தனி வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தல் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்குதல் ஆகியவற்றை முன்வைத்துள்ளனர்.
மனு கையளிப்பு
போராட்டக்காரர்கள் பதுளை நகரில் இருந்து ஊர்வலமாகச் சென்று, ஊவா மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பினர்.

அதில், “தற்காலிக திட்டங்கள் வேண்டாம், நிலையான தீர்வு வேண்டும்” என்ற கோஷம் போராட்டத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.
போராட்டத்தின் நிறைவில், மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
மலையக மக்களின் நீண்டகால காணி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் பிரதான நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


