உறுமய காணிப்பத்திரங்கள் வழங்கும் திட்டம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் உறுமய காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் திட்டத்திற்காக பொதுமக்கள் தமது ஆவணங்களை வழங்கி உறுதிகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இத்திட்டம் தொடர்பில் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட செயலகத்தில் இன்று (11.05.2024) நடைபெற்ற விசேட கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கைகள்
மேலும், இந்த திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 27,595 உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக உறுமய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றினை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேவேளை, விரைவில் திட்டத்தினை நிறைவுசெய்து மக்களுக்கான உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும் நிகழ்வில், இராஜாங்க அமைச்சர்களான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் (Viyalendiran), மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கான மேலதிக அரசாங்க அதிபர், காணி பிரிவிற்கான பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |