வடக்கு கிழக்கின் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதில் உதவும் ஐக்கிய நாடுகள் சபை
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக நிலவும் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் சபை தமது பங்களிப்பை வழங்கவுள்ளது.
இது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய ஐக்கிய நாடுகள் சபைத் திட்டம், விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகும் ஏராளமான உரிமைகோரல்கள் தீர்க்கப்படாமல் உள்ளன என்பதை கருத்திற்கொண்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
காணிப் பிரச்சினை
இது தொடர்பில் இலங்கையின் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அரசு நிறுவனங்களுடன் தாம், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதற்காக விபரங்களை இறுதி செய்து வருவதாகவும், அடுத்த சில மாதங்களுக்குள் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரின் போதும் அதற்குப் பின்னரும் இரண்டு மாகாணங்களிலும் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுடன், ஐக்கிய நாடுகளின் நீண்டகால ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சேதமடைந்த காணி ஆவணங்கள், இடம்பெயர்வு, உரிமையாளர்களின் மரணம் மற்றும் அகதிகள் திரும்புதல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள நிலம் தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிப்பதிலேயே, ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்திற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது.
பேச்சுவார்த்தை
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்னர், கடந்த அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த விவாதங்களின் விளைவாகவே முன்னைய அரசாங்கம் ‘உருமய’ நில உரிமை விநியோகத் திட்டத்தை ஆரம்பித்தது.

எனினும் தற்போதைய அரசாங்கம் "ஹிமிகம" என்று குறித்த திட்டத்துக்கு மறுபெயரிட்டு, கடுமையான நிபந்தனைகளுடன் நில உரிமை ஆணவங்களையும் விநியோகித்துள்ளது.
இந்தநிலையில் 3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், இந்த திட்டம் இரண்டு மாகாணங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் இரண்டு ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இருப்பினும், செயல்முறை சிக்கலானது. இதில் சட்டத்தரணிகள், காணிகளின் எல்லை நிர்ணயம் மற்றும் அளவையியலாளர்களின் செயல்முறைகளிலும் தம் அமைப்பு உதவவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025