வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் மரணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
தொழிலதிபரும் முன்னாள் செலிங்கோ குழுமத் தலைவருமான லலித் கொத்தலாவலயின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஒரு குழுவினர், அவரை பணயக்கைதியாக வைத்திருந்ததாக, குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தரணிகள் உட்பட சிலர் கொத்தலாவலவை சுற்றி வளைத்து, அச்ச மனநோய்க்குள் அவரை தள்ளினர் என்று கொத்தலாவலவின் மைத்துனி சிரீன் விஜேரத்ன கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
லலித் கொத்தலாவலயின் மரணம் தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சாட்சியாளர் இதனை தெரிவித்துள்ளார்.
லலித் கொத்தலாவலயின் பரம்பரை சொத்துக்கள் உட்பட மதிப்புமிக்க சொத்துக்களை தங்கள் சொந்த பெயரில் எழுதிக்கொள்வதற்காகவே, குறிப்பிட்ட சிலர், அவரை பயன்படுத்திக்கொண்டனர் என்றும் சாட்சி குறிப்பிட்டார்.
இருண்ட அறை
தொழிலதிபர் ஒரு இருண்ட அறையில் தங்க வைக்கப்பட்டார், அவரது படுக்கையறையிலிருந்து அவரது அலுவலகத்தில் உள்ள, மாநாட்டு அறை வரையான பத்து அடி தூரம் மட்டுமே அவருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.
குறித்த சிலர் அவரை அவரது குடியிருப்பை விட்டு வெளியேறும்படி வலியுறுத்தினர். அத்துடன் அவரை அவரது அலுவலகத்திற்கு மாற்றினர், அங்கு அவர் ஒரு இருண்ட அறையில் வைக்கப்பட்டார்.
அதன்பிறகு, சொத்துக்களை தங்களுடைய பெயரில் எழுத வைத்தனர் என்றும் சாட்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.