நுவரெலியா மாவட்டத்தின் பின்னடைவு - நாடாளுமன்றில் மஞ்சுள சுரவீர சரமாரியாக கேள்வி
நுவரெலியா மாவட்டம் எதிர்கொண்டுள்ள நீண்டகால அபிவிருத்தி மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும், நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீர, நாடாளுமன்றத்தில் நேற்று (08.09.2026) பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற ரீதியில், மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் சில கேள்விகளை முன்வைக்க விரும்புவதாகத் தெரிவித்த அவர், குறைந்த கல்வியறிவு காணப்படும் மாவட்டம் எது? குறைந்த அளவில் வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்ட மாவட்டம் எது? மந்தபோசணம் அதிகமாக காணப்படும் மாவட்டம் எது? அரச சேவையாளர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து சேவையாற்ற வேண்டிய நிலை காணப்படும் மாவட்டம் எது? என்ற கேள்விகளை முன்வைத்துள்ளார்.
சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள்
அத்துடன், சுத்தமான குடிநீரை குறைந்த அளவில் பயன்படுத்தும் பகுதிகள் மற்றும் மக்கள் தொடர்பான பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுவரெலியா மாவட்டம் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், 'எந்நாளும் 88, 89 பற்றி எழுதிக்கொண்டு வந்து அதனை மாத்திரம் பேசிக்கொண்டிருப்பது போதாது' எனக் குறிப்பிட்ட மஞ்சுள சுரவீர, நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் விழிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அணிதிரளும் மக்கள்
மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கு மக்கள் அணிதிரண்டு வருவதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடிநீர் மற்றும் அரச சேவைகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பில் நீண்டகால தீர்வுகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எந்தளவுக்கு முன்னெடுக்கப்படுகின்றன என்பதே தற்போது கவனத்தை ஈர்த்துள்ள விடயமாக உள்ளது.