கொரோனா கட்டுப்பாடு- வெளிப்புற நிகழ்ச்சிகள் தொடர்பில் முடிவு!
இலங்கையில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் வெளிப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்தலாமா அல்லது கூடாதா என்பதில் ஒரு தெளிவின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கருத்துப்படி, தற்போதுள்ள தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் இசை நிகழ்வுகள் உட்பட வெளிப்புற நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்க முடியாது.
2022 ஜனவரி 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி, வெளிப்புற நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது என்று பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளனத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் அனைத்து வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கும் ஒலி அனுமதி வழங்குமாறு காவல் நிலையங்களுக்கு கடந்த டிசம்பர் 27 அன்று பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ, ஒலி அனுமதிப் பத்திரங்களை வழங்குமாறு பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும், எனினும் வெளிப்புற இசை நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் குறிப்பிட்டார்.
இதன்போது சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டால் மட்டுமே ஒலி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கொரோனா ஒருங்கிணைப்பாளர்- வைத்தியர் அன்வர் ஹம்தானி, இசை நிகழ்ச்சிகளை நடத்தலாமா வேண்டாமா என்ற குழப்பம் உருவாகியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று உறுதியான தீர்வு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.