நீதிமன்றத்தில் மாயமான குடு சலிந்துவின் வழக்கு ஆவணங்கள் : விசாரணைகள் தீவிரம்
“குடு சலிந்து” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சலிந்து மல்ஷித குணரத்னேவுக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரு தனித்தனி வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்ரப ஏற்படுத்தியது.
இந்த விடயம் தொடர்பில், நீதிமன்ற ஊழியர்கள் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன வழக்கு ஆவணங்கள்
இவர்களுள் ஏழு பெண் அதிகாரிகளும் அடங்குவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
காணாமல் போன வழக்கு ஆவணங்கள் தொடர்பில் பாணந்துறை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கடந்த செப்டெம்பர் 1ஆம் திகதி பாணந்துறை தெற்கு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ‘பி’ அறிக்கை மூலம் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் பாணந்துறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன ஆவணங்களில், குடு சலிந்துவின் உத்தரவின் பேரில் பாணந்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு ஆவணங்களும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கின் ஆவணங்களும் அடங்குகின்றன.
கடந்த ஒகஸ்ட் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் மொஷன் மூலம் அழைக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பான அறிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கண்டுபிடிக்க முடியாததால், அந்த வழக்கு ஒகஸ்ட் 31ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படுவதற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
பொலிஸ் விசாரணை
இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த வழக்கு ஆவணங்கள் காணாமல் போயிருந்தமை தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில், குறித்த ஆவணங்கள் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அலுவலக உதவியாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அவை ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

எனினும், பின்னர் அந்த ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமரா காட்சிகளையும் எதிர்காலத்தில் பொலிஸார் பரிசோதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You May Like This Video..