குடத்தனை உப தபாலகருக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம் (VIDEO)
யாழ். குடத்தனை உப தபாலகருக்கு எதிராக இரண்டாவது நாளாக இன்று பாதிக்கப்பட்ட மக்கள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2018 ம் ஆண்டு வரை உப தபாலதிபாராக பணியாற்றி வந்திருந்தவர் வறிய மக்களது பொதுசன மாதாந்த கொடுப்பனவு, மின்சார பட்டியல் கொடுப்பனவு, தேசிய சேமிப்பு வங்கி உட்பட பல்வேறு மக்கள் நிதிகளை மோசடி செய்தும் மதி நுட்பமாக ஏமாற்றியும் உள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட மணல்காடு, குடத்தனை, அம்பன் பகுதிகளை சேர்ந்த பலரும் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பண மோசடி தொடர்பில் குற்றச்சாட்டு
இதன்படி குடத்தனை உப தபாலகத்தில் பணியாற்றி வந்துள்ள அதிகாரியொருவர் மக்கள் பண மோசடி தொடர்பில் தாமகவே பதவியிலிருந்து விலகியும் தபால் திணைக்களத்தால் 3 ஆண்டுகளின் பின்னர் பதவியிலிருந்து நீக்கிய நிலையில் மீண்டும் ஏதோ ஒருவகையில் பணி மீள் நியமனம் பெற்று உபதபாலகர் பணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதனை அறிந்து கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி வருகை தந்துள்ளார்.
இதனையடுத்து தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, பாதிக்கப்பட்ட மக்களை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் குறித்த உப தபாலகர் இனி குடத்தனை உப தபாலகத்திறக்கு பணிக்கு வருகை தர மாட்டார் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
பொலிஸாரிடம் முறைப்பாடு
மீண்டும் இன்று குறித்த உபதபாகலர் பணிக்காக வந்த வேளை அங்கு தமது பணத்தை கேட்க சென்ற பாதிக்கப்பட்ட மக்களை கண்டவுடன் அலுவலகத்தை திறந்தும் உள் செல்லாமல் வெளியேறியுள்ளார்.
இதே வேளை குறித்த மோசடிகள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையோ மேற்கொள்ளாது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தபால் திணைக்களம் செயற்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை தான் நிரந்தரமாக பணியிலிருந்து விலகியதாக அறிவித்து சென்ற வேளை அங்கு
பதில் கடமை ஆற்றியவர் நான்கரை ஆண்டுகள் பணியாற்றியும் எந்தவித பிரதி
உபகாரமும் இன்றி பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




