மட்டு. மாவட்டத்தில் புதிய மின் உற்பத்தி நிலையம்: கேள்விக்குறியாகிய விவசாயிகளின் வாழ்வாதாரம்
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சாப்பமடு வாகநேரி வயல் பிரதேசத்தில் உருவாக்கப்படவுள்ள மின் உற்பத்தி நிலையம் தொடர்பாக அப்பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.
குறித்த வயல் பிரதேசத்தில் கொரிய நிறுவனம் ஒன்றினால் அமைக்கபடவுள்ள சூரியப்படல மின் உற்பத்தி திட்டம் காரணமாக தனது வாழ்வாதாரங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பிரதேச விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக தங்களது வயல் நிலங்களை இழக்கவுள்ள விவசாயிகள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அவர்களுக்கு சுமுகமான தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கும் முகமாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறித்த பிரதேசத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
பறிபோகும் விவசாய நிலங்கள்
அதற்கமைய விவசாயம் செய்கை செய்யப்பட்டு வந்த 353 ஏக்கர் வயல் நிலம் சூரியப்படல மின் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலமை ஏற்படக் கூடிய அபாயகரமான சூழ் நிலை உருவாகியுள்ளதாக அப்பிரதேச விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் 1952 ஆம் ஆண்டு காலப் பகுதி தொடக்கம் பரம்பரை ரீதியாக விவாயச் செய்கையில் இவ் விடத்தில் ஈடுபட்டு வந்த நிலம் தற்போது அபிவிருத்தி என்ற போர்வையில் பறிபோகும் நிலமை உருவாகியுள்ளதாகவும் இதனை தடுத்து காணியினை பெற்றுத் தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த காணிக்கு பதிலாக மாற்று காணி ,நட்டஈடு, துப்பரவு செலவு என்பன வழங்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்திருந்த போதிலும் அதனை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நிலவரம் தொடர்பாக தீர்வு பெறும் பொருட்டு அமைச்சருக்கும் அங்கு வருகை தந்த உயர்மட்ட அதிகாரிகாளுக்கும் இடையில் நிண்ட நேர கலந்துரையாடல் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
மின் உற்பத்தியும் திட்டம்
அதாவது சூரியப்படல மின் உற்பத்தி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட விவசாயிகளின் காணிகளை கைவிட்டு அதே இடத்தில் வீதிக்கு மேற்கேயுள்ள வன இலகாவிற்கு உரிமையான காணிகளை திட்டத்திற்கு வழங்கலாம் என முடிவு எட்டப்பட்டது.
அத்துடன் ஒரு சிலருக்கு குறித்த இடத்தில் காணி உள்ளதாகவும் அவர்களுக்கு பதிலீட்டு காணிகள் வழங்கலாம் எனவும் கலந்துரையாடப்பட்டது.
அதற்கு வன இலகா அதிகாரிகள் தங்களால் இவ் முடிவினை எடுக்ககூடிய அதிகாரம் இல்லாததால் கொழும்பு தலைமை அதிகாரிகளுடைய உத்தரவினை பெறுவதே பொருத்தமானதாகும் என ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
எனவே எதிர்வரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் மின் உற்பத்தியும் திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
