யாழில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கொல்களம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ். மல்லாகம் பகுதியில் இயங்கிவந்த சட்டவிரோத கொல்களமானது தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியினால் முற்றுகையிடபட்ட நிலையில் மீட்கப்பட்ட கால்நடைகளை பராமரிக்க நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொல்களம் ஒன்று இயங்கி வருவதாக தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாருடன் விரைந்த நிலையில் பசுமாடு ஒன்றினையும் கன்று ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
மீ்ட்கப்பட்ட ஆயுதங்கள்
இதேவேளை சட்டவிரோதமான முறையில் மாடுகளை வெட்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் மாடுகளை நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை குறித்த சட்டவிரோதமான கொல்களத்தினை நடாத்தி வந்தவர் சார்பில் சட்டத்தரணி பார்த்தீபன் முன்னிலையானார்.
இதனையடுத்து மீட்க்கப்பட்ட கால்நடைகளை தெல்லிப்பழை அன்பு இல்லத்தில் பராமரிக்க நீதிவான் உத்தரவிட்டதோடு சந்தேகநபரை நாளை(07.05.2024) முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை சுன்னாகம் பகுதியில் கொல்களத்தினை இயக்கிவரும் உரிமையாளரே சந்தேகநபர் என்றும் மல்லாகத்தில் வெட்டபடுகின்ற மாடுகளை சுன்னாகத்தில் விற்பனை செய்வதாகவும் சுகாதார அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், பல மாடுகளை கட்ட பயன்படுத்தப்பட்ட கயிறுகளை கைப்பற்றிய அதிகாரிகள் முறையான நீர் ஆகாரமின்றிய நிலையிலேயே கால்நடைகளை மீட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |