பல்லாயிரம் மக்கள் மத்தியில் கொக்கட்டிச்சோலை தான்தோறீச்சரர் தேரோட்டத்தில் நடந்த அதிசயம் (Video)
கிழக்கிலங்கையின் முதல் தேரோடும் ஆலயம் என்ற பெருமையினையும் இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைதான்தோன்றீச்சரம் ஆலயத்தின் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.
கல் நந்தி புல்லுண்டு வெள்ளைனை உதைத்து சிலையாக்கிய அற்புத பெருமையினைக் கொண்ட கிழக்கில் தேரோடும் சிறப்பு மிக்க வரலாற்றுத்தலமாகிய கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சர பெருவிழா கடந்த மாதம் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.
தமிழ் மன்னர்கள் வகுத்த வழிமுறையின் கீழ் இன்றும் தான்தோறீச்சரம் உற்சவம் பழமை மாறா பண்பாட்டு விழுமியங்களுடன் நடைபெற்றுவருகின்றது.
தேர் உற்சவம்
கொடித்தம்பத்திற்கு விசேட அபிசேக ஆராதனை நேற்று (03.09.2023) நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் பூஜைகள் நடைபெற்று வண்ணக்குமாரர்கள் பாரம்பரிய நடைமுறைகளுடன் பிள்ளையார் மற்றும் தான்தோன்றீஸ்வரர் தேரடிக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு தேர்களுக்கும் பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது பிள்ளையார் தேர் முதலாவதாக இழுத்துச்செல்லப்பட்டது.
பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் இந்த தேர் இழுத்துச்செல்லப்பட்டு நிறுத்தப்பட்ட நிலையில் தான்தோன்றீஸ்வரர் அமர்ந்துள்ள தேருக்கு விசேட பூஜைகள் நடாத்தப்பட்டது.
விசேட பூஜைகள்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரண்டு பக்கமாக நின்று வடமிழுத்தபோது தேர் வடங்கள் ஆறு தடவைகள் அறுந்த நிலையில் இறுதியாக விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் தேர் நகர்ந்துசென்றது.
இதேபோன்று முன்பு இரு சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக ஊர்பெரியார்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது 1920களில் தேர் ஆலயத்தைவிட்டுச்சென்று ஆற்றில் தாண்டதாகவும், 1933இல் உள்வீதியில் வலம்வந்த இருதேர்களும் ஓடாமல் இடைநடுவில் நின்றதாகவும் மூன்று நாட்களுக்குப்பிறகு படுவான்கரை ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேரினை இழுத்துச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விட்டதாக தெரிவிக்கின்றனர்.
வேட்டை திருவிழா
இன்று நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு பீதியினை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஏதோவொரு தெய்வக்குற்றம் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து இரண்டு தேர்களும் ஆலய முன்றிலுக்கு பக்தர்களினால் இழுத்துவரப்பட்டதை தொடர்ந்து தேர் உற்சவம் நிறைவுபெற்றது.
தேர் உற்சவத்தினை தொடர்ந்து முனைக்காடு வீரபத்திரர் ஆலயத்தில் தேரோட்ட உற்சவத்திருவேட்டை திருவிழா இன்று இரவு சிறப்பாக நடைபெற்றது.