புகழ்பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய 9ஆம் நாள் திருவிழா (Video)
புல்லுண்ட கல் நந்தி அமைந்துள்ளதும், பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றானதுமான புகழ்பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 9ஆம் நாள் திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த திருவிழா நிகழ்வுகள் நேற்றைய தினம் (27.08.2023) இரவு மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டுள்ளது.
ஆலய பிரதம குரு மு.கு.சச்சிதானந்தக் குழுக்கள் தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில் மூல மூர்த்தியாகிய தான்தோன்றீஸ்வரருக்கும், கொடித் தம்பத்திற்கும் பூஜைகள் நடைபெற்று பின் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்ற பின் சுவாமி உள்வீதி வலம் வந்திருந்தார்.
வெளிவீதி வலம் வந்த சுவாமி
இதனை தொடர்ந்து தாந்தோன்றீஸ்வரர் உமாதேவியர் சமேதராய் விசேடமாக அமைக்கப்பட்ட சப்பறத்திலும், பிள்ளையார் மூசுக வாகனத்திலும், முருகன் வள்ளி தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும், விஷ்ணுபகவான் குதிரை வாகனத்திலும், சண்டேசுவரர் எருது வாகனத்திலும் சுவாமிகள் வெளி வீதி வலம் வந்து திருவிழா நடைபெற்றது.
ஆலய தலைவர் இ.மேகராசா தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 19.08.2023 அன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெறிருந்தது.
தேரோட்டம் எதிர்வரும் 03.09.2023 அன்று பிற்பகல் 4 மணியளவில் நடைபெறவுள்ளதுடன் அன்றயதினம் இரவு 7 மணியளவில் திருவேட்டை
இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.