கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரேரணைகள் முன்வைப்பு
திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பால் சில பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டமானது, பிரதியமைச்சர் அருண் கேமச் சந்திரா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பால் சில பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகள்
இதன்படி, கிண்ணியா இலங்கை போக்குவரத்து சபை அலுவலகம் தளபாட பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றது, தற்பொழுது கிண்ணியா மக்கள் வங்கி புதிதாக கட்டப்பட்டு மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது, அங்குள்ள பழைய தளபாடங்களை கிண்ணியா போக்குவரத்து சபைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கக் கோருகின்றேன்.

இரண்டாவதாக, கிண்ணியாப் பிரதேசத்தில் பலர் கருவாடு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இந்த தொழில் மூலம் பல நூறு பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பினை பெறுகின்றனர்.
இவ்வாறான நிலையில் அவர்களின் கருவாட்டுப் பரண்களை அகற்றுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றீடாக அவர்கள் தமது தொழிலினை மேற்கொள்வதற்காக கடலினை அண்டிய வேறோர் இடத்தினை தெரிவு செய்து வழங்க வேண்டும்.
மேலும், சீனக்குடா விமானப்படைதளம் அமைந்துள்ள கலப்பு பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்கு விமானப்படையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், Marble Beach- ஐ அண்டிய கடல் பரப்பில் கிண்ணியா பகுதி கடற்றொழிலாளர்கள் மீன் பிடிப்பதற்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களின் நலன்கருதி இந்த தடைகளை உடனடியாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.