வட கொரியாவின் ஆணு ஆயுதங்கள்: உலக நாடுகளை எச்சரிக்கும் கிம் ஜாங் உன்
"நாட்டின் அணு ஆயுத திறனை வலுப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம்," என வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் ஆணு ஆயுதங்கள் என்பது போருக்கு எதிராக தடுப்பு அரணாக பயன்படுத்தும் ஒரு கருவியே. ஆனால் அது வேறு மாதிரியாகவும் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதில் தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் வட கொரியா தனது மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது. சர்வதேச அளவில் இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன.
அமெரிக்கா வட கொரியா மீது தடை
இந்த சோதனைக்கு பிறகு அமெரிக்கா வட கொரியா மீது பல்வேறு தடைகளை விதித்தது.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைகள் அமெரிக்க பெருநிலப்பரப்பு வரை வட கொரியா தாக்குதல் நடத்த உதவும்.
மேலும் எந்த நேரத்திலும் தனது திறனை காட்ட அணு ஆயுதப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் கிம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், வட கொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க தான் தயாராக இருப்பதாக பைடன் தெரிவித்திருந்தாலும் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனான உறவுக்கே கிம் ஜாங் உன் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகம் மோசமான அளவில் அணு ஆயுதப்போரை நெருங்கிக்கொண்டிருக்கிறது என
பிரித்தானிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர் ஸ்டீபன் லவ்க்ரோவ் (Sir Stephen Lovegrove) எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.