கிளிநொச்சி இந்து கல்லூரியில் அபகீர்த்தியை ஏற்படுத்திய ஆசிரியரை இடமாற்றக்கோரி போராட்டம்(video)
கிளிநொச்சி இந்து கல்லூரியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட ஆசிரியரை இடமாற்றக்கோரி பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் பாடசாலை நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற இந்துக்கல்லூரியின் ஆசிரியர்களையும்,மாணவர்களையும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் முகநூல்களில் பதிவுகளை இட்டு வந்த ஆசிரியரை இடமாற்றக்கோரி வலய கல்வி பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி திணைக்களம் ஆகியவற்றிற்கு குறித்த பாடசாலையின் பெற்றோர்,பழைய மாணவர்கள் ஆகியோரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கற்றல் செயற்பாடுகளுக்கு நடவடிக்கை
இந்நிலையில் குறித்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படாத நிலையில் மேற்படி ஆசிரியர் பாடசாலை அதிபருக்கு எதிராக நேற்று (19-12-2022) பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டதை கண்டித்தும் இன்றைய 20-12-2022) காலை 7 மணி முதல் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலை நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முற்பட்டபோதும் கொண்டுவர முடியாத நிலையில் சம்பவ இடத்திற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ஆசிரியர் பொலிஸ் பாதுகாப்பில் அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



