நாடளாவிய ரீதியில் டீசல் தட்டுப்பாடு : வரிசையில் காத்திருக்கும் மக்கள் (Video)
நாட்டில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் முற்றுமுழுதாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் “டீசல் இல்லை” என்ற பதாதை வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி மருதனார்மடம் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறு “டீசல் இல்லை” என்ற பதாதைகள் தொங்க விடப்பட்டுள்ளன.
அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகமான மக்கள் கூட்டத்தையும் அவதானிக்க முடிந்துள்ளது.
மலையகம்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், நுவரெலியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் வரை வரிசை நீடிப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதனால் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
டீசலுக்காக நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருந்ததுடன், போதுமான டீசல் இருக்கவில்லை என்பதால், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் சாரதிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியாவிற்க்கு வெளி மாவட்டங்களிலிருந்து வந்த உள்ளூர் சுற்றுலா பயணிகள் மீண்டும் தங்களது ஊருக்கு செல்ல தங்களது வாகனங்களில் போதியளவு டீசல் இல்லாமல் நீண்ட வரிசையில் நின்றதையும் அவதானிக்க முடிந்துள்ளது.
இதனால் அவர்கள் பெருந்தொகையை செலுத்தி நுவரெலியாவில் விடுதியில் தங்கியிருக்க வேண்டும் என தெரிவித்தனர். டீசல் பற்றாக்குறையால் மரக்கறிகளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லவிருந்த லொறிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் முற்றுமுழுதாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அறிவித்தல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வாகன சாரதிகள் நீண்ட தூரம் அத்தியாவசியப்பொருட்களை கொண்டுசெல்வதில்
பெரிதும் சிரமங்களை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சியில் அத்தியாவசிய தேவைகளிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல், டீசல் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் முதல் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. எரிபொருள் பெற்றுக்கொள்ள வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதுடன், அதிருப்தி வெளியிடுகின்றனர்.
பெற்றோலுக்கு பதிலாக சுப்பர் பெற்றோலை பெற்றுக் கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.
இவ்விடயம் தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரிடம் வினவியபோது,
இருப்பில் இருந்த பெற்றோல் தீர்ந்து போயுள்ளது. வருகைதரும் மக்களிற்கு வழங்க முடியவில்லை. இருப்பில் உள்ள சுப்பர் பெற்றோலையே வழங்குகின்றோம். அதுவும் குறைவாகவே உள்ளது.
இருப்பில் உள்ள மிக குறைந்த அளவிலான பெற்றோல் மற்றும் டீசலை அத்தியாவசிய தேவையின் நிமித்தம் வருவோருக்கு உறுதிப்படுத்திய பின் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வழங்குவதாகவும் தெரிவித்தார்.








