சிறுமி மீதான தவறான நடத்தை : கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு பதின்ம வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது
குறி்த்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிசாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது
தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நேற்றையதினம்(27.05.2026) குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி G. கருணாகரன் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தியமை மற்றும் கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த குற்றவாளிக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து இலட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரன சிறைத்தண்டனையும் அத்துடன் முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் இரண்டாம் குற்றச்சாட்டுக்கு பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் ஆறு மாத கால அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.