கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள அமைப்புகளுக்கு புதிய நிர்வாகம் தேவை!
கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள பன்னங்கண்டி மற்றும் சின்னக்காடு கமக்கார அமைப்புகளின் நிர்வாக கட்டமைப்புக்களின் ஆயுட்காலம் நிறைவடைந்தும் இதுவரை குறித்த அமைப்புக்களுக்கான புதிய நிர்வாகத் தெரிவுகள் ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி- கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள சின்னக்காடு கமக்கார அமைப்பு மற்றும் பன்னங்கண்டி கமக்கார அமைப்பினுடைய நிர்வாக ஆயுட்காலம் நிறைவடைந்த நிலையில், அதற்கான புதிய நிர்வாகத் தெரிவுகளை கமநல சேவை நிலையம் இதுவரை நடத்தவில்லை.
கமக்கார அமைப்புகள்
குறித்த அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்படாமலும் கடந்த காலங்களில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட நிதி மற்றும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பான கணக்கறிக்கைகள் விவசாயிகளுக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த மாவட்ட விவசாய குழு கூட்டத்தின் போது, ஒவ்வொரு ஆண்டும் கமக்கார அமைப்பினுடைய புதிய நிர்வாக தெரிவு மேற்கொள்ளப்படும் என கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த அமைப்புக்கான நிர்வாக தெரிவுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.