இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு அபாயம்! அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படலாம்
இலங்கையில் சிறுநீரக அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
சிறுநீரக மாற்று சிகிச்சையில் மிகவும் அவசியமான மருந்தான Basiliximab தடுப்பூசி இல்லாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாற்றப்பட்ட சிறுநீரகம் உடனடியாக நிராகரிக்கப்படுவதைத் தடுக்க சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் Basiliximab கொடுக்கப்பட வேண்டும்.
காத்திருப்பு பட்டியலில் பலர்
சிறுநீரக மாற்று வைத்தியசாலைகள் எதிலும் தற்போது இந்த மருந்து இல்லை என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் தனயார் மருத்துவமனைகளிலும் இந்த மருந்து இல்லை என குறிப்பிடப்படுகின்றது.
Basiliximab மருந்துக்கு பதிலாக பயன்படுத்தப்படும் ஏடிஜி (ஆன்டிதைமோசைட்) என்ற மாற்று மருந்து அரச வைத்தியசாலைகளில் இல்லை என்றும், அது தனியார் துறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் இந்த மருந்து தீர்ந்துவிட்டதால், இவற்றை உடனடியாக வழங்குமாறு மருத்துவமனை மருத்துவ விநியோகப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் மருந்து கிடைக்காவிட்டால் சத்திரசிகிச்சையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நேற்றைய (ஜூலை 25) நிலவரப்படி, தேசிய சிறுநீரக மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக பத்து நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர், மேலும் வாரத்திற்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் உள்ளன.
இந்த அத்தியாவசிய மருந்துகள் இல்லாத பட்சத்தில் திடீரென மூளை சாவடைந்து உயிரிழந்த ஒருவரிடமிருந்து சிறுநீரகம் பெறப்பட்டால் அதனை மாற்றும் வாய்ப்பும் இல்லாமல் போகும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் சிறுநீரக சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டால், காத்திருப்புப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் எனவும், சத்திரசிகிச்சைகள் மீண்டும் மீண்டும் தாமதமான பின்னரும் நோயாளிகள் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.