போர்நிறுத்த மத்தியஸ்தர்களிடம் ஹமாஸ் கையளித்த முக்கிய ஆவணம்
போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கான தமது ஒப்புதல் ஆவணத்தை, ஹமாஸ் போராளிகள் குழுவின் துணைத்தலைவர் கலீல் அல்-ஹய்யா தலைமையிலான ஒரு குழு, மத்தியஸ்தர்களிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டார் மற்றும் எகிப்தில் உள்ள மத்தியஸ்தர்களிடம் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்டார் மற்றும் எகிப்தில் மத்தியஸ்தர்களுடனான போர்நிறுத்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பேச்சுவார்த்தையின் முடிவு போர்நிறுத்தமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்மொழியப்பட்ட ஒப்பந்தம்
முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், தெற்கு காசா பகுதியிலிருந்து வடக்கே இடம்பெயர்ந்தோர் திரும்புவதை கட்டார் மற்றும் எகிப்து மேற்பார்வையிடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய இராணுவம் மத்திய காசாவில் உள்ள நெட்சாரிம் வழித்தடத்திலிருந்து படிப்படியாக விலகும் எனவும் இதன்போது கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் போது காசா எல்லையிலிருந்து 700 மீட்டர் (2,297 அடி) க்குள் உள்ள பகுதிக்கு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்க வேண்டும் என்றும் ஹமாஸ் கேட்டுக் கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்தோடு, ஆயுள் தண்டனை அனுபவிக்கும் 250 பேர் உட்பட சுமார் 2,000 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கவேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“பாலஸ்தீன குழுக்கள் 33 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கும்.
காசாவில் காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சை பெற இஸ்ரேல் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
முதல் கட்டம் தொடங்கிய ஏழு நாட்களுக்குப் பிறகு இஸ்ரேல் எகிப்துடனான ரஃபா கடவையைத் திறக்கவேண்டும்.
பிலடெல்பி காரிடார் என்று அழைக்கப்படும் காசாவின் எகிப்துடனான எல்லையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கலை ஆரம்பிக்க வேண்டும்.
பின்னர் ஹமாஸ் தரப்பு அதிலிருந்து முழுமையாக விலகும்” என ஒப்புதல் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம்
அத்தோடு, இஸ்ரேலிய இராணுவம் நிறுத்தப்பட்டுள்ள காசா பகுதிகளுக்கு செல்லாமல் இருக்குமாறு பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு அமைப்பு அந்நாட்டு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
போர் நிறுத்தம் குறித்த விவரங்கள் அறியப்பட்டு செயல்படுத்தப்படும் வரை பொதுமக்களுக்கு குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியான அறிக்கையில், "காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு, உங்கள் சொந்த பாதுகாப்பிற்காக - காசா பகுதியில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் - இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் இருக்கும் பகுதிகளை அணுகுவதைத் தவிர்க்குமாறு நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |