சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட மற்றுமொரு முக்கிய உடன்பாடு
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், ஏழாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான அதிகாரி மட்ட உடன்பாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினரும் இலங்கை அதிகாரிகளும் எட்டியுள்ளனர்.
இந்த மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்தவுடன், இலங்கைக்குச் சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வசதியாகக் கிடைக்கும்.
இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் மொத்த நிதி உதவி 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும். இந்த அதிகாரி மட்ட உடன்பாடானது நிறைவேற்று வாரியத்தின் இறுதி ஒப்புதலுக்கு உட்பட்டது.
திட்டத்தின் அளவுருக்களுக்கு அமைவாக நிதி அமைச்சரால் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அத்துடன், பல்தரப்பு பங்காளிகளின் நிதிப் பங்களிப்புகள் உறுதி செய்யப்படுவதோடு, கடன் மறுசீரமைப்பில் போதிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கான நிதி உத்தரவாத மீளாய்வு நிறைவு செய்யப்பட வேண்டும்.
போதிய முன்னேற்றம்
வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் 4.2% வளர்ச்சியடைந்துள்ளன என்றும், இது தொடர்ச்சியாக வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த 11 ஆவது காலாண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தொழிற்துறை அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, "நிறைவேற்று சபை கவனத்திற்கொள்ளும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டச் சமர்ப்பிப்பு, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்தரப்பு நிறுவனங்கள் ஊடாக நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரிப்பதற்கான நிதித் திரட்டல் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, 7 ஆவது மீளாய்வுக்கான நிறைவேற்று சபையின் அனுமதி நிச்சயமாகக் கிடைக்கும். கடந்த செப்டெம்பர் 10 முதல் 23 வரை இலங்கை வந்த ஐ.எம்.எவ். குழுவின் மீளாய்வு தோல்வியடையும் எனச் சில ஊடகங்கள் மக்களைத் தவறாக வழிநடத்தின.
மத்திய கிழக்கு போர்ப் பதற்றம், சர்வதேச வர்த்தகக் கொள்கைகள் மற்றும் 'எல் - நினோ' காலநிலை மாற்றங்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது." என்றார்.