நாடளாவிய ரீதியில் சிறப்பாக நடைபெற்ற கேதாரகெளரி விரதம் (Video)
சக்திப்பீடங்களில், ஐஸ்வரியங்களை அள்ளி அருளும் அம்மனின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான கேதாரகெளரி விரத உற்சவத்தினை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களில் விஷேட அபிஷேகங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் யாழ். நல்லூர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தின் கேதாரகௌரி விரதம் இன்று (25.10.2022) பக்திபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
இவ்விரதம் கடந்த 05ஆம் திகதி ஆரம்பமாகி 21 நாட்கள் அனுஷ்டிக்கப்பட்டு இன்று (25.10.2022) நிறைவடைந்துள்ளது.
அர்த்தநாதீஸ்வராக சிவபெருமானும், உமாதேவியாரும் கையிலாச வாகனத்தில் உள்வீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளனர்.
கேதாரகௌரிகாப்பு விரதம் உற்சவத்தில் பல இடங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் அருட்கடாச்சத்தினை பெற்றுச் சென்றதுடன் புனித நோன்புகாப்பினை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நயினை ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் கேதார கௌரி விரதம் இன்று (25.10.2022) பக்தி பூர்வமாக இடம்பெற்றுள்ளது.
கேதார கௌரி விரத காப்பு உற்சவத்திற்கு பக்தர்கள் பலபாகங்களிலும் இருந்து வருகைதந்து விரதபுனித நூலினை பெற்றுச்சென்றுள்ளனர்.
மலையகம்
இந்துக்களின் விரதங்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான கேதார கௌரிவிரதம் இன்று (25.10.2022) திகதி மலையக இந்து ஆலயங்களிலும் மிக சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ஹட்டன் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற பழைமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் ஆலய பிரதம குரு பாலசுப்பிரமணியம் சர்மா தலைமையில் மிகவும் சிறப்பாக இந்த விரதம் நடைபெற்றுள்ளது.
இந்த கௌரி விரத பூஜையில் ஏராளமான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: மலைவாஞ்சன்
வவுனியா
இந்துக்களின் விசேட விரதங்களில் ஒன்றாகிய கேதார கௌரி விரதத்தின் கௌரி காப்பு கட்டும் நிகழ்வும், விசேட பூஜை வழிபாடும் வவுனியாவின் பல ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது.
அந்தவகையில் வவுனியா, குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
செய்தி: சதீஸ்,தீசன்



