அறுகம்பே மரதன் ஓட்டப்போட்டி: கென்யா நாட்டை சேர்ந்த அனிக்கா பேலிம் முதலிடம்
அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியின் 21.1கிலோமீற்றர் போட்டியில் பெண்கள் பிரிவில் கென்யாவை சேர்ந்த அனிக்கா பேலிம் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி நேற்று (18) பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன்போது, பெண்கள் பிரிவில் ஜேர்மனியை சேர்ந்த டீ. அனிக்கா டோன் இரண்டாமிடத்தினையும், அவுஸ்திரேலியாவை சேர்ந்த சஸாலி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
பிரிவு ரீதியில் போட்டி
அதேவேளை, ஆண்கள் பிரிவில் அவிசாவளயை சேர்ந்த விமல்காரியவசம் முதலாமிடத்தினையும், வெலிமடயை சேர்ந்த ரீ.டபள்யூ.ரத்னபால இரண்டாமிடத்தினையும், டென்மார்க்கை சேர்ந்த பெஸ்டியன் குலோஸ்கோ மூன்றாமிடத்தினையும் பெற்றனர்.
மேலும், இந்த மரதன் போட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 260 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த மரதன் ஓட்டப்போட்டியானது, 21.1 கிலோமீற்றர் அரை மரதன், 10 கிலோமீற்றர் மற்றும் 5 கிலோமீற்றர் என மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது.
அது மாத்திரமன்றி, 5 கிலோமீட்டர் போட்டியில் சிறுவர்கள், முதியவர்கள் கலந்துகொண்டனர். ஏனைய இரு பிரிவுகளிலும் பிரபல மரதன் ஓட்ட வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டவர்களின் பங்கேற்பு
10 கிலோமீட்டர் மரதன் போட்டியின் ஆண்கள் பிரிவில் வெலிமடையை சேர்ந்த டீ.எம்.எரந்த தென்னகோன் முதலாமிடத்தினையும், மகியங்கனையை சேர்ந்த கே.எம்.சரத்குமார் இரண்டாமிடத்தினையும், நுவரெலியாவை சேர்ந்த எம்.சௌந்தரராஜன் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.
பெண்கள் பிரிவில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெல்லா றுஸல் முதலாமிடத்தினையும், றீஸ்கா கிஸ்ஜெஸ் இரண்டாமிடத்தினையும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த டெஃப்னா டென்போமா மூன்றாமிடத்தினையும் பிடித்துள்ளனர்.
சிறுவர்களுக்கான 5 கிலோமீற்றர் மரதன் ஓட்டப்போட்டியில் கே.றினோஸ் முதலாமிடத்தினையும் எம்.ரீ.எம்.இன்ஷாப் இரண்டாமிடத்தினையும், என்.அனீஸ் மூன்றாமிடத்தினையும் பெற்றனர்.
வளந்தோருக்கான 5 கிலோமீற்றர் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஏ.எஸ்.மொஹானி முதலாமிடத்தினையும், மொனிசா டில்சான் இரண்டாமிடத்தினையும், தோமஸ் பீபர் மூன்றாமிடத்தினையும் தமதாக்கினர்.
சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
பெண்கள் பிரிவு போட்டியில் அலன் கோல்ப் முதலாமிடத்தினையும், ரைகா வேன்டியர் ஸ்ட்ரியட்டர் இரண்டாமிடத்தினையும், லரீசா பலஸ் மூன்றாமிடத்தினையும் பெற்றனர்.
இதில் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
குறித்த மரதன் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் பணப்பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், அறுகம்பே அரைமரதன் போட்டியினை அறுகம்பே அபிவிருத்தி மன்றம் 6ஆவது தடவையாகவும் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.