கென்யா-சோமாலியா எல்லை 15 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு: ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அறிவிப்பு
அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்கள் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கென்யா - சோமாலியா இடையிலான எல்லைப் பகுதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் திறக்கப்படும் என கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
கொடூர தாக்குதல்
கடந்த 2011ஆம் ஆண்டு கென்யா தனது இராணுவத்தை சோமாலியாவிற்குள் அனுப்பியதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த 680 கி.மீ நீள எல்லை மூடப்பட்டது.

அல்-ஷபாப் அமைப்பு 2013இல் நைரோபி வணிக வளாகத்தில் 67 பேரையும், 2015இல் கரிசா பல்கலைக்கழகத்தில் 148 பேரையும் கொன்று குவித்த கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
முன்னதாக 2023இல் எல்லையைத் திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், தொடர் தாக்குதல்கள் காரணமாக அந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டது.
திறக்கப்படுவதற்கான காரணங்கள்
தற்போது எல்லையைத் திறப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மேம்படும் என்றும், குறிப்பாக மண்டேரா (Mandera) போன்ற எல்லை நகரங்களில் பிரிந்து வாழும் உறவினர்கள் மீண்டும் இணைய வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி ரூட்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எனினும், எல்லையைத் திறப்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருக்க கூடுதல் இராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
சோமாலியாவில் அல்-ஷபாப் அமைப்பு மீண்டும் சில பகுதிகளைக் கைப்பற்றி வருவதாகப் புலனாய்வு அறிக்கைகள் எச்சரித்துள்ள நிலையில், கென்ய அரசு எடுத்துள்ள இந்த முடிவு ஒரு முக்கியமான மற்றும் துணிச்சலான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.