சஜித் எச்சரிக்கையை கண்டுக்கொள்ளாத அநுர அரசாங்கம்..! கென்னடி குணவர்தன குற்றச்சாட்டு
இலங்கையில் வாழ்க்கைச் செலவு மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதுடன், தற்போதைய ஆட்சியாளர்களின் தேர்தல் கால வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் பொய்களாக நிரூபிக்கப்பட்டுள்ளன என சிரேஷ்ட பேராசிரியர் கென்னடி குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான காரியாலயத்தில் நேற்று(07.04.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரம், நீர், எரிபொருள் மற்றும் எரிவாயு கட்டணங்கள் மிக வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் கடும் கவலைக்குரிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, ஏனையோர் வறுமையின் விளிம்புக்குச் சென்றுள்ளனர்.
சர்வதேச சந்தையில் விலை உயரும் போது விலைகளை அதிகரிக்க அரசாங்கம் தேவையில்லை என முன்னர் கூறியவர்களின் வாக்குறுதிகள் இன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. எரிவாயு விலையேற்றம் என்பது வெறும் மத்திய கிழக்கு யுத்தத்தால் ஏற்பட்டது மட்டுமல்ல. யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னரே நாட்டில் எரிவாயுப் பிரச்சினை காணப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் புதிய நிறுவனம் ஒன்றுக்கு எரிவாயு விநியோகத்தை வழங்கியுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்திடம் தொடர்ச்சியான விநியோக வசதிகள் உள்ளனவா என்பது குறித்து முறையான விசாரணைகள் எதனையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
சஜித் எச்சிரிக்கையை கண்டுக்கொள்ளாத அரசாங்கம்
ஹோர்முஸ் நீரிணை மூடப்படக்கூடிய அபாயம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த மார்ச் 3ஆம் திகதியே எச்சரித்திருந்தார்.
இருப்பினும், அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தவில்லை. இன்று அதன் பாதிப்புகளை அனுபவிக்கும் போது மாத்திரம் அரசாங்கம் அது குறித்துப் பேசுவது வேடிக்கையானது. தேசிய மக்கள் சக்தி ஒரு காலத்தில் தத்துவங்களை வழங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இன்று அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் அந்த தத்துவங்கள் அனைத்தும் இல்லாமல் போயுள்ளன.

சமூக வலைதளச் செயற்பாட்டாளர்களுக்குப் பணம் வழங்கி எதிர்க்கட்சியினரை இலக்கு வைப்பதைத் தவிர்த்து, நாட்டை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் முன்வர வேண்டும்.
இத்தகைய பலவீனமான நிர்வாகத்தால் எதிர்கால சந்ததியே விநாசமடைந்து வருகின்றது. உதய கம்மன்பிலவின் புத்தக வெளியீட்டு விழாவில் சஜித் பிரேமதாஸ கலந்துகொண்டமை ஒரு ஜனநாயகப் பண்பாகும். அதற்காகப் புத்தகத்தின் கருத்துக்களுடன் அவர் உடன்படுகின்றார் என்று அர்த்தமல்ல.
அதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தாமதமாவது நியாயமற்றது. எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள 6 பரிந்துரைகளின் கீழ் நிரந்தர விசாரணை அலுவலகம் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan