கல்முனையில் ஒரு பகுதியளவு நிலம் கூட விட்டுக் கொடுக்க முடியாது : ஹரீஸின் கருத்துக்கு கோடீஸ்வரன் பதிலடி
கல்முனை (Kalmunai) நகரத்தை நான்காக அல்லது 48 ஆகப் பிரியுங்கள் ஆனால் கல்முனை தமிழர் பிரதேசத்தில் ஒரு இஞ்சி அளவு நிலம் கூட விட்டுக் கொடுக்க முடியாது என அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வினையான கருத்து
மேலும் தெரிவிக்கையில், “சமூக வலைத்தளங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் (H. M. M. Harees) கருத்தை அவதானித்தேன். அவரது கருத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனங்களை வேதனைப்படுத்துவதாக இருக்கின்றது.
குறிப்பாக 56ஆவது நாளாக மழையிலும் வெயிலிலும் கல்முனையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ஹரீஸின் கருத்து இருக்கின்றது. அந்த எதிர்வினையான கருத்துக்குப் பதிலடி கொடுக்க எனக்குக் கடமை இருக்கின்றது.
இந்தப் போராட்டத்தின் பின்னால் அரசியல் பின்னணி இருக்கின்றது எனக் ஹரீஸ் கூறுகின்றார். இது அப்பட்டமான பொய். உணர்வுள்ள அனைத்து மக்களும் இணைந்து நிர்வாக அதிகார பயங்கரவாதத்துக்கு எதிராக போராட்டத்தை நடத்துகின்றனர்.
1993இல் வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்ட பிரதேச செயலகத்திற்கான பூரண அதிகாரங்களை அவர்கள் கேட்கிறார்கள்.
ஜனாதிபதியிடம் நாங்கள் நேரடியாக இந்த விடயத்தைக் கூறியிருக்கின்றோம். ஓர் அரச அதிபர் பக்கச்சார்பற்றவராக இருக்க வேண்டும். அவர் அரச நிர்வாகி. ஓரினத்துக்கு மாத்திரம் கடமைச் செய்ய அவரை ஜனாதிபதி நியமிக்கவில்லை.
தமிழர்களின் தாயகம்
கல்முனையை நகரை நான்காகப் பிரிக்கப் போவதாகக் ஹரீஸ் கூறுகின்றார். அது அவரது சொந்தக் கருத்து. அவர் நான்காக அல்ல 48 ஆகப் பிரிக்கட்டும். எத்தனை பிரிப்பு வந்தாலும் எமது கல்முனை தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள 29 கிராம சேவை பிரிவுகளிலே எந்தவொரு இஞ்சி நிலத்தைக் கூட விட்டுக் கொடுக்க முடியாது. கல்முனை என்பது தமிழர்களின் தாயகம்.
அவர் கல்முனைக்குப் பிதா, தான் என்று கூறுகின்றார். ஹரீஸ் கல்முனைக்குப் பிதாவாக ஒருபோதும் இருக்க முடியாது. தேவையானால் அவர் பிறந்த கல்முனைக்குடிக்குப் பிதாவாக இருக்கட்டும்.
இதே செயற்பாட்டில் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா ஈடுபட்டிருந்தார். இப்போது ஹரீஸ் ஈடுபடுகின்றார்.
இந்தத் துண்டாடும் கோஷத்தை முன்வைத்து தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முயல்கின்றார். ஹரீஸ், தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளைக் குழப்ப முனைகின்றார். ஒருபோதும் அவரால் முடியாது. அது பகல் கனவு.
இந்தப் பிரிவுகளை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தமிழ் பிரதேசங்களில் உள்ள அனைத்து வளங்களையும் மக்களையும் உள்ளடக்கிய தனியான பூரண அதிகாரம் மிக்க பிரதேச செயலகம் ஒன்றே அந்த மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை நிறைவேற்றியே தீருவோம்." என்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |