பிரித்தானிய அரச பாதுகாப்புடன் கட்டுநாயக்கவில் வந்திறங்கினேன்: கருணா பகிரங்கம்
தான் பிரித்தானிய அரச பாதுகாப்புடன் கட்டுநாயக்காவில் வந்திறங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(27.03.2025) இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாங்கள் கூட்டமைப்பை உருவாக்கியது உலகம் முழுக்க பேசு பொருளாக பார்க்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரித்தானிய அரசாங்கம் கருணாவாகிய எனக்கு தடைவிதித்தது.
இருப்பை சூறையாடும் நடவடிக்கை
நாங்கள் என்ன பிச்சையா எடுக்கப்போகின்றோம்? இவ்வளவு நாளும் இல்லாத தடையை கூட்டுச் சேர்ந்ததும் விதிக்கின்றனர். இது ஒரு அரசியலுக்கான நாடகம் தான். பிரித்தானிய அரசாங்கத்தால் நான் 2006ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு அங்கு சிறைச்சாலையில் 8 மாதங்கள் இருந்தேன்.
அப்போது, கண்டுபிடிக்காத குற்றத்தை இப்போது தான் பிரித்தானிய அரசாங்கம் கண்டுபிடித்துள்ளது. எப்படியான ஒரு முட்டாள்தனமான அரசாங்கம். அந்தநேரம் கண்டுபிடித்து கையில் விலங்கை போட்டு கொண்டு சென்றிருக்கலாம்.
ஆனால், அரச மரியாதையுடன் கட்டுநாயக்க விமான நிலையம் வரை என்னை பாதுகாப்புடன் கொண்டுவந்தார்கள். அப்படிப்பட்ட பிரித்தானிய அரசாங்கத்துக்கு இப்போது தான் கருணா பிழை செய்துள்ளார் என விளங்கியுள்ளது.
ஆகவே, இது எல்லாம் கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கை. இதற்காக புலம் பெயர்ந்து வாழ்கின்ற சில அருவருடிகள் ஒத்துழைத்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
