கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கை தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கையை பெறுவதற்காக, கொழும்பு பிரதான நீதித்துறை மருத்துவ பரிசோதகருக்கும் அரசாங்க பகுப்பாய்வாளருக்கும் கொழும்பு, கோட்டை நீதிபதி பாசன் அமரசேன இன்று (19) அழைப்பாணைகளை அனுப்பியுள்ளார்.
வழக்கு விசாரணைக்கான சாட்சியங்கள் கோரல்
இந்த வழக்கு விசாரணைக்கான சாட்சியங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

28 ஆவது சாட்சியாக கொழும்பு குற்றப்பிரிவு கைரேகை அலுவலகத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் குமுது செனவிரத்னவும், 31 ஆவது சாட்சியான கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் மகேஷ் மதுசங்கவும் இன்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான சாட்சிய சமர்ப்பிப்பு இன்று நிறைவடைந்த நிலையில், பிரேத பரிசோதனைக்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு தேவையான பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பகுப்பாய்வாளரின் அறிக்கையை அடுத்த நீதிமன்றத் திகதியில் சமர்ப்பிப்பதற்காக, கொழும்பு பிரதான நீதித்துறை மருத்துவப் பரிசோதகருக்கும் அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கும் நீதிபதி அழைப்பாணைகளை அனுப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.