முடிவுக்கு வந்த திருகோணமலை கன்னியா பிள்ளையார் கோயில் வழக்கு
திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் அமைந்திருந்த பகுதிக்கு அருகில் புதிய கட்டுமானப் பணிகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், அங்கு தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் பணிகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாகவும் தொல்லியல் திணைக்களம் நேற்று (22) திருகோணமலை மேல் நீதிமன்றில் எழுத்துமூலம் உறுதியளித்துள்ளது.
குறித்த வழக்கு எழுத்துமூல அறிக்கைக்காக நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் சார்பில் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
அரச சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல அறிக்கையில், குறித்த பகுதியில் புதிய கட்டுமானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், தொல்லியல் இடத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதாகக் கூறி பிள்ளையார் கோயில் தர்மகர்த்தா கோகிலரமணி கணேசன் வழக்கை மீள நகர்த்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகளை இடைநிறுத்தி நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தொல்லியல் திணைக்களம் குறித்த விடயம் தொடர்பில் எழுத்துமூலம் உறுதியளித்துள்ள நிலையில், வழக்கை மேலும் தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் இல்லையெனத் தெரிவித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. வழக்காளி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.