பாஜக நாடாளுமன்ற உறுப்பினரை தாக்கிய பாதுகாப்புத் துறை பெண் மீது வழக்கு தாக்கல்
பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த பாதுகாப்புத் துறை பெண் மீது இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்திற்கு நேற்று(06.06.2024) பிற்பகல் கங்கனா ரனாவத் சென்றபோதே இந்த சம்பவம் இடம்பெற்றது.
நிலை குலைந்த கங்கனா
அப்போது நடிகையிடம் வழக்கமான சோதனைகள் நடைபெற்றன. அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பணியிலிருந்த பாதுகாப்புப்படை பெண் குல்விந்தர் கவுர், கங்கனாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் நிலை குலைந்த கங்கனாவை, அவருடைய பாதுகாவலர்கள் அங்கிருந்து பத்திரமாக விமானத்துக்கு அழைத்துச் சென்றனர். அதேநேரம் பாதுகாப்புப் படை வீரர்கள், கவுரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள கங்கனா, சோதனை முடிந்த பின்னர் தாம் அவரை கடந்தபோது, பெண் பொலிஸ் தம்மை தாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் போராட்டம்
குறித்த விடயம் சம்பந்தமாக பாதுகாப்புத் துறை பெண் அதிகாரியிடம் கேட்டபோது, விவசாயிகளின் போராட்டத்துக்காகவே இப்படி செய்தேன் என்று அவர் குறிப்பிட்டதாக கங்கனா தெரிவித்துள்ளார்.
முன்னதாக விவசாயிகள் 100 மற்றும் 200 ரூபாய்களுக்காக போராட்டம் செய்கிறார்கள் என்று கங்கனா ரனாவத் கூட்டம் ஒன்றில் தெரிவித்ததாகவும் அந்த போராட்டத்தில் தமது தாய் பங்கேற்றதாகவும், கங்கனாவை அறைந்த பாதுகாப்புத் துறை பெண் தெரிவித்திருந்தார்.
அத்துடன் விவசாயிகளை கங்கனா பயங்கரவாதிகள் என்றும் விமர்சித்திருந்தார். கங்கனா வெளியிட்ட இந்த கருத்து அவருக்கு எதிராக பல தரப்பில் இருந்தும் பலத்த எதிர்ப்பலையை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOINNOW |