போராட்டம் திரைப்படக் குழுவை வாழ்த்திய சுவிற்சர்லாந்து சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளர்
கந்தையா பாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போராட்டம் திரைப்படக் குழுவினருக்கு சுவிற்சர்லாந்து சைவநெறிக்கூடத்தின் இணைப்பாளர் செந்தமிழ் அருட்சுனையர் சிவருசி. தர்மலிங்கம் சசிகுமார் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
"ஈழத் தமிழர்களின் திறமையையும், சமூகப் பொறுப்பினையும் உலகுக்குப் பறைசாற்றும் வகையில் உருவாகியுள்ள 'போராட்டம்' திரைப்படத்தை வழங்கிய தயாரிப்பாளர் கந்தையா பாஸ்கரனுக்கும், இயக்குநர் ராஜ் சிவராஜ் உட்பட அனைத்துக் கலைஞர்களுக்கும் எமது உளமார்ந்த வாழ்த்துகள்.
திறமையான படைப்பு
முதல் படத்திலேயே கதாநாயகனாக இயல்பான நடிப்பால் மிளிர்ந்துள்ள ரீகன் பாஸ்கரன், வாழ்வியல், காதல், விளையாட்டு, விடாமுயற்சி எனப் பல கோணங்களில் திறமையாக பங்காற்றியுள்ளார்.

அதேவேளையில், தற்போதைய சூழலில் ஈழத்தமிழ்ச் சமூகத்தை அச்சுறுத்தும் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வையும் இத்திரைப்படம் மிகச் சீர்திறனுடன் பதிவு செய்திருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது.
அறுபதுகளில் மலர்ந்த ஈழத்தமிழ்த் திரையுலகில், வணிக ரீதியான வெற்றி என்பது ஒரு சவாலாகவே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், பொருள் நயத்தைக் காட்டிலும் எமது மண்ணின் கலைஞர்களுக்கு நல்வாய்ப்பளித்து, தென்னிந்தியத் திரைக்கு நிகரான தரத்துடன் இத்திரைப்படத்தை அளித்துள்ள தயாரிப்பாளர் பாஸ்கரன் கந்தையாவின் முயற்சி போற்றத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.