கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி பணிகள், மத்திய மாகாண அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி பணிகள், சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளன.
கண்டாவளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (03.07.2025) பகல் 9.30 மணிக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரனின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கலந்து கொண்டவர்கள்
குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் துறைசார் திணைக்களங்களின் திணைக்கள தலைவர்கள், பொலிஸார், கடற்படை கிராமசேவையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் குறித்து பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலில் ஒருங்கிணைப்பு குழு தலைவர், வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது சரியான பதில் வழங்குவதற்கான உயர் அதிகாரிகள் வருகை தராமையால் குறித்த விடயம் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவில்லை.
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த வெறுமனே பொலிஸார் மற்றும் அதிகாரிகள் மாத்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இல்லை பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதற்கு பதிலளித்த கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமகிழ்தன், தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததாக கூறும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரால் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.


