வடக்கு மாகாண சூரிய மின்கல திட்ட விவகாரம்: அத்துரலிய ரத்ன தேரரின் கருத்துக்கு காஞ்சன பதிலடி
வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கல திட்டத்துக்கு சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வில் (06.03.2024) அத்துரலிய ரத்ன தேரர் எம்.பி. முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சூரிய மின்கலத் திட்டம்
அவர் மேலும் கூறுகையில்,
"வடக்கு மாகாணத்தில் சீன நிறுவனத்துக்குச் சூரிய மின்கல திட்டம் வழங்கப்படவும் இல்லை, சீன நிறுவனம் அவ்வாறான கோரிக்கைகள் எதனையும் விடுக்கவும் இல்லை.
அதேபோல் வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கலத் திட்டத்தை முன்னெடுக்க இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும், வடக்கில் சூரிய மின்கல திட்ட அபிவிருத்தியில் அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின்னலகுக்கு 50 ரூபா கிடைக்கும் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது என்று அத்துரலியே ரத்ன தேரர் எம்.பி குறிப்பிடுகின்றார்.
இதன்படி ஊடகங்கள் பொய்யான செய்தியை வெளியிடவில்லை. விமல் வீரவன்ச எம்.பி.யே இந்த விடயத்தை ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.
அதானி நிறுவனம் அவரிடம் தனிப்பட்ட முறையில் இவ்வாறு யோசனைகளை முன்வைத்துள்ளதா என்று தெரியவில்லை.
வடக்கு மாகாணத்தில் மின்னுற்பத்தி திட்டத்தை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதற்கு ஒரு கோடி டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் வடக்கு மாகாணத்தில் மின்னுற்பத்தித் திட்டத்தை மேம்படுத்த ஒரு கோடி பத்து இலட்சம் டொலர் நிவாரணத்தை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விலைமனு கோரல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய நிவாரணத்தால் வடக்கு மாகாணத்தில் அனலைதீவு, நெடுந்தீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். இந்தத் திட்டத்துக்கு அரசு ஒரு சதம் கூட செலவழிக்கத் தேவையில்லை.
காற்றாலை திட்டம்
அத்துடன் எதிர்காலத்திலும் செலவழிக்கத் தேவையில்லை. இவ்வாறான நிலையில் இந்தத் திட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?
இந்நிலையில், மன்னார் காற்றாலை மின்னுற்பத்தியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றார்கள். சுற்றுச்சூழல் மாசுபபடுவதாக இருந்தால் காற்றாலை திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்கினாலும் பாதிப்பு ஏற்படும் தேசிய நிறுவனங்களுக்கு வழங்கினாலும் பாதிப்பு ஏற்படும்.
அத்தோடு, மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுமானால் காற்றாலை மின்னுற்பத்தி வலயத்தில் இருந்து மன்னார் பகுதியை நீக்க வேண்டும். ஒரு தரப்பினர் கூறி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குத் தடையாக இருக்கின்றார்கள்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |