கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம்! ஏற்றப்பட்டது பொதுச் சுடர் - LIVE
புதிய இணைப்பு
கிளிநொச்சி – கனகபுரம் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்படி, சற்று முன்னர் தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர் கொடுத்த வீர மறவர்களை நினைவேந்தி பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
பொதுச் சுடரினை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் சகோதரரும், மூத்த போராளியுமான மூர்த்தி அவர்கள் ஏற்றி வைத்தார்.
இதனையடுத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, வீர மரணம் கண்ட மாவீரர்களை கண்ணீரோடு மக்கள் அஞ்சலித்து வருகின்றனர்.
சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி – கனகபுரம் துயிலும் இல்லம், மாவீரர் நாளை நினைவேந்துவதற்கு தயாராகி வருகிறது.
தேச விடுதலைக்காக மாண்ட மாவீரர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்துவதற்கு தமிழர் தாயகம் முழுவதும் இன்று (27.11.2025) தயார் நிலையில் உள்ளது.
இன்று மாலை 6.05 மணிக்கு ஆலயங்களில் மணியோசை எழுப்பப்பட துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்படவுள்ளது.

மாற்றுவீதியினை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்
வடக்கு, கிழக்கில் 25இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படவுள்ளனர்.
இன்று மாலை 4 மணிக்கு பின்னர் கனகபுரம் துயிலுமில்ல முன் வீதி மூடப்பட்டிருக்கும். ஆகையால் இவ்வீதி ஊடாக பயணிப்போர் மாற்றுவீதியினை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri