கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளோருக்கான அறிவிப்பு
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மாவீரரின் பெற்றோர் மற்றும் உருத்துடையவர்கள் உறவினர்கள் உரிய நேர காலத்தில் வருகை தந்து உங்களது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தினமான நாளைய தினம் அதிகளவான மழை பெய்யக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலத் திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் இதனை கருத்தில் கொண்டு குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாற்று வீதிகளை பயன்படுத்த அறிவுறுத்தல்
மேலும் தெரிவிக்கையில், நவம்பர் 27ஆம் நாள் மாலை 4 மணிக்கு பின்னர் கனகபுரம் துயிலுமில்ல முன் வீதி மூடப்பட்டிருக்கும். ஆகையால் இவ்வீதி ஊடாக பயணிப்போர் மாற்றுவீதியினை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மக்களின் பாதுகாப்புக்காக பொலிஸாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது. அத்தோடு அன்றைய தினம் தனியார் போக்குவரத்து கழகத்தினர் பரந்தன் பகுதியில் இருந்து 3 மணி தொடக்கம் மாவீரர் துயிலுமில்லம் செல்வதற்கான இலவச பேருந்து சேவையினை முன்னெடுக்க உள்ளனர்.
அதேபோன்று டிப்போ சந்தியில் இருந்து 3.30 மணி தொடக்கம் தனியார் பேருந்து கழகத்தினரின் இலவச பேருந்து சேவை இடம்பெற உள்ளது. மக்கள் இச்சேவையை பெற்றுக் கொள்ள முடியும். குறித்த தினத்தன்று வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

