பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட முல்லைத்தீவு விஜிந்தன் தொடர்பில் கொழும்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடை பிரிவு பொலிஸாரினால் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கால வரையறையின்றி சிறைகாவலில் தடுத்து வைக்கப்பட்ட கமலநாதன் விஜிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
"நாளை முல்லைத்தீவு“ எனும் அமைப்பை ஆரம்பித்து சமூக அபிவிருத்தி செயல்பாடுகளில் ஈடுபட்ட முன்னாள் அபிவிருத்தி சங்கத் தலைவர் கமலநாதன் விஜிந்தன், அரசியல் இலாபம் பெறும் நோக்கில் முகநூலில் விடுதலைப் புலிகளின் அமைப்பை மீள் உருவாக்கும் வகையிலான விடயங்களை பதிவு செய்ததன் மூலம் நாட்டில் இனப்பிரச்சினை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சுமத்தி, தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடை பிரிவு பொலிஸாரினால் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
தடுப்பு காவல்
கைது செய்யப்பட்ட இவரை மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின்னர் , 21ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு கால வரையறையின்றி சிறைகாவலில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று (25) இந்த வழக்கின் சந்தேக நபர் சார்பாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இன்று (26) நீதிமன்றத்தில் சந்தேகநபரான கமலநாதன் விஜிந்தன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் சார்பில் தனது கனிஷ்ட சட்டத்தரணிகள் பிருந்தா சந்திரகேஷ் மற்றும் தம்பிராஜா தயானந்தராஜாவுடன் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தை முன் வைத்ததனையடுத்து இன்று சந்தேகநபரான கமலநாதன் விஜிந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும், இவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, ஏழு நாட்களில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |