இலங்கையின் தேசியப் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு செயலாளர் வெளிப்படுத்தியுள்ள தகவல்
நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பு என்பதற்கான வரைவிலக்கணத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் பாடசாலை நிகழ்வு ஒன்றில் வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு சில இடங்களில் படுகொலைச் சம்பவங்கள் இடம்பெறுவதனால் தேசியப் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாது.
அந்நிய நாடொன்றினால் தாக்குதல், பயங்கரவாத அச்சுறுத்தல், கோவிட் பெருந்தொற்று போன்ற நோய் நிலைமைகளினால் மக்கள் பலர் செத்து மடிதல், இயற்கைப் பேரழிவுகளினால் மக்கள் செத்து மடிதல் போன்ற நிலைமைகள் தேசியப் பாதுகாப்பு பிரச்சினையாக கருதப்பட முடியும்.
ஒப்பீட்டளவில் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கைக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் இடம்பெறும் சம்பவங்களை தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலைமையாக கருத முடியாது. அது எல்லா நாடுகளிலும் இடம்பெறக்கூடியவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
