களுவாஞ்சிகுடியில் காணாமல் போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் படகில் கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கல்முனைக்குடி கடற்பகுதியில் தேடுதல் முன்னெடுத்துக் கொண்டிருந்த கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு களுதாவளைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை ஸ்ரீமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் கடற்றொழிலுக்கு சிறிய படகில் தனியாக சென்ற நிலையில் நேற்று காலை ஆகியும் வீடு திரும்பவில்லை.
பிரேத பரிசோதனை
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட நிலையில் அவரை தேடும் பணிகளில் கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது கடற்றொழிலாளர்கள் சென்று தேடிய போது விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும் அதில் அவர் இல்லாமல் போயிருந்த நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இவ்வாறிருக்கையில், இன்று அதிகாலை கல்முனைக்குடிக்கும் கல்முனைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அவரது சடலம் மிதந்ததை கண்டு கடற்றொழிலாளர்கள் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலும், சடலம், விசாரணைகளை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.