பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாடசாலை மாணவியின் மரணம்! சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்
களுத்துறை பிரதேசத்தில் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரதான சந்தேகநபர் நேற்று (09.05.2023) அதிகாலை செனிகம கோவிலுக்கும் ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் களுத்துறை இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய தனுஷ்க கயான் சஹபந்து என்பவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் அம்பலாங்கொட பிரதேசத்தில் இருப்பதாகவும், வாடகை அடிப்படையில் கார் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக நேற்று அதிகாலை அப்பகுதிக்கு வருவார் எனவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் பிரகாரம், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முகவர் போன்று வேடமணிந்து அம்பலாங்கொடை பிரதேசத்திற்கு காரை வழங்குவதற்காக சென்று சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் அவரை அம்பலாங்கொடை பகுதியில் வைத்து காரில் ஏற்றிய, சாரதி போன்று உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேகநபரை கவனமாக சேனிகம கோவிலுக்கும் ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
இதன்போது விரைந்து செயற்பட்ட களுத்துறை தெற்கு பொலிஸ் குற்றப்பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி உள்ளிட்ட குழுவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 95,000 ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மாணவியுடனான பழக்கம்
இதனை தொடர்ந்து சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணின் காதலன் ஊடாக குறித்த பாடசாலை மாணவியை தாம் அடையாளம் கண்டதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு முன்னர் தாம் குறித்த மாணவியை சந்தித்ததில்லை எனவும், அவருடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை எனவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை தாம் உட்பட நால்வரும் குறித்த விடுதிக்கு சென்று மது அருந்தியதாகவும் அவர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனைய தம்பதியினர் விடுதியை விட்டு வெளியேறிய பின்னர், தானும் மாணவியும் அறையில் இருந்ததாகவும், ஆனால் உடலுறவு கொள்ளவில்லை என்றும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காணாமல்போயுள்ள மாணவியின் தொலைபேசி
இதனிடையே, மாணவியின் கையடக்கத்தொலைபேசியில் வந்த அழைப்புக்கு, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிலளித்ததாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, மாணவி அறையின் ஜன்னல் அருகே இருந்த நாற்காலியில் ஏறி ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்துக்கொண்டமையினால், பயந்து அந்த இடத்தை விட்டு ஓடியதாகவும் சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தப்பிச்சென்று சந்தேகநபர் ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனது விவாகரத்து பெற்ற மனைவியின் வீட்டில் தங்கியிருந்து பின்னர் வேறொரு விடுதிக்கு சென்று சில மணித்தியாலங்கள் தங்கியிருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சந்தேகநபர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில், அவரது தொலைபேசி தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. மேலும், உயிரிழந்த மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லை என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பாடசாலை மாணவியின் கையடக்கத் தொலைபேசி தொடர்பான விசாரணையின் போது, விடுதிக்குச் சென்ற மற்றைய தம்பதிகள் தொலைபேசியை களு கங்கையில் வீசியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இறுதி கிரியை
குறித்த தம்பதியினரும் பிரதான சந்தேகநபரும் தப்பிச்செல்ல உதவிய காரின் சாரதி மே 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பாடசாலை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பிற்பகல் களுத்துறை இசுரு உயன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, களுத்துறை நாகொட பாடசாலையில் கல்வி பயின்ற குறித்த மாணவியின் சடலம் சமய சடங்குகளுடன் நேற்று மாலை
களுத்துறை, அடவில பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.