பரபரப்பை ஏற்படுத்திய களுத்துறை மாணவியின் மரணம்! நடத்தப்பட்ட இறுதிக் கிரியைகள்
களுத்துறை - நாகொட பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று (09) இடம்பெற்றன.
களுத்துறை அடவில பொது மயானத்தில் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன.
தொடருந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
களுத்துறை - நாகொட பிரதேசத்தில் தற்காலிக தங்குமிடத்துடன் கூடிய ஐந்து மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து வீழ்ந்ததாக சந்தேகிக்கப்படும் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரிகளால் ஐந்து மாடிக் கட்டிடத்தின் பின்னால் உள்ள தொடருந்து பாதைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் திஹார திராணி நிஷங்க சில்வா என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
உயிரிழந்த பாடசாலை மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் கடந்த 6ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு வந்துள்ளார்.
பின்னர், தேசிய அடையாள அட்டையை கையளித்து, அந்தந்த ஹோட்டலில் இரண்டு அறைகளை பதிவு செய்தனர். இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும் நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்ததை ஹோட்டல் ஊழியர் ஒருவர் பார்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், குறித்த குழுவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்ற இளைஞனும் பீதியுடன் ஹோட்டலை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது ஹோட்டலுக்கு உணவு எடுக்க வந்த நபர் ஒருவர் ஹோட்டலை ஒட்டியுள்ள தொடருந்து தண்டவாளத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
குறித்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக உள்ளதால் வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
திடீரென ஹோட்டல் அறையை விட்டு பீதியுடன் வெளியேறிய இளைஞன், அவசர அவசரம் எனக் கூறி முன்னதாக ஹோட்டலில் இருந்து வெளியேறிய இளைஞனையும் யுவதியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் காலி பிரதேசத்தில் பதுங்கியுள்ளதாக களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் தம்மக சில்வா தலைமையிலான குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு ஹிக்கடுவ பிரதேசத்தை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.