நாமலுக்காக கொண்டு வரப்பட்ட பாம்புகோல்.. ராஜாங்கனை தேரர் விடுக்கும் எச்சரிக்கை
தற்போதைய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் நாட்டு மக்களுக்காகச் சுதந்திரமாகச் செயற்பட விடுமாறும், அதற்கு இடையூறு விளைவிக்க முற்பட்டால் தக்க பதிலடி வழங்கப்படும் எனவும் ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது, கடந்த 76 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் நாட்டைப் போதைப்பொருள் கேந்திரமாக மாற்றிச் சீரழித்த நிலையில், அத்தகைய ஒரு நாடே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
கடும் எச்சரிக்கை
அவர் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், இன்னும் மூன்று ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருக்குமாறும் தேரர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், "2029 ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் நாமல் அல்லது திலித் போன்றவர்களை ஜனாதிபதியாக்குவதற்காகச் சிலர் அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்கின்றனர்.
பலாங்கொட கஸ்ஸப, ஹங்குணுவெ தம்மரத்ன, உலப்பனே சுமங்கல மற்றும் தித்தகல்ல ஆனந்தசிறி ஆகியோர் போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு காவியுடைக்குப் பின்னால் ஒளிந்து திருடர்களுக்கு முண்டுகொடுக்க வேண்டாம்.
தாம் எந்தவொரு பதவியையோ அல்லது தனிப்பட்ட இலாபத்தையோ எதிர்பார்த்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவில்லை, ஏழை எளிய மக்களுக்காக ஒரு அழகான நாட்டைக் கட்டியெழுப்புவதே தமது நோக்கம்.
நாட்டின் 225 இலட்சம் மக்களுக்காக நூறு தடவைகள் உயிர்த்தியாகம் செய்யவும் தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்த சத்தாரத்ன தேரர், ஜனாதிபதி நாட்டைத் தூய்மைப்படுத்தும் பணியை முன்னெடுக்கட்டும், அதற்கு யாரேனும் குறுக்கே நின்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும்” என எச்சரித்தார்.