கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 13 ஆவது நாளாக தொடரும் போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த தொடர் போராட்டத்தின் 13 ஆவது நாள் போராட்டமானது இன்று(06.04.2024) கவனயீர்ப்பு பேரணியுடன் பிரதேச செயலகத்தின் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம்
கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் போராட்டக்காரர்கள் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளையும் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மேலும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரத போராட்டம் பல அரசியல்வாதிகள் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால் போராட்டத்தை கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |