ஞானசாரதேரரை விடுவிக்கக்கோரி முன்னெடுக்கப்படும் மனுவுக்கு காலியில் கடும் எதிர்ப்பு!
சிறைவாசம் அனுபவிக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்க வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டும் கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கைக்கு காலி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதேசவாசி ஒருவர்,
இலங்கை பௌத்த நாடாக இருந்தாலும், நாட்டின் அரசியலமைப்புக்கும் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கும் அனைத்து குடிமக்களும் கட்டுப்பட்டவர்களே எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.
சட்டம் அனைவருக்கும் சமம்
கடந்த கால ஆட்சிகளில் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் அதிகாரம் கொண்டவர்கள் சட்டத்தைத் தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்டார்.

மேலும், பௌத்த பிக்குகள் நாட்டுக்கும் சமூகத்துக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டியவர்கள் என்றும், இனவாதத்தையோ மதவாதத்தையோ தூண்டும் வகையிலான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மத அடிப்படையில் சட்ட விலக்கு வழங்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இலங்கையில் நீடித்த இன நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கட்டியெழுப்ப வேண்டுமானால், எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த அரசியல் செல்வாக்கைக் கொண்டிருந்தாலும், சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பது அவசியம் என்றும் இதன்போது பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.