இலங்கையில் கள்ளு களியாட்ட விழா-நிதி ராஜாங்க அமைச்சர்
இலங்கையில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்று கள்ளு களியாட்ட விழாவை நடத்த அனுமதி கோரி இருப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதற்காக நாள் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் வெளிநாட்டவர்கள் மத்தியில் தென்னங்கள்ளு, பனங்கள்ளு,கித்துல் கள்ளு ஆகியவற்றை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த கள்ளு களியாட்ட விழா நடத்தப்படுகிறது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை மதுபானங்கள்
இலங்கையில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் சுமார் 35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்நிய செலாவணி பற்றாக்குறையே எமக்கு இருக்கும் பெரிய பிரச்சினை.
இதற்கு தீர்வாக உள்நாட்டு மதுபான தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து கவனம் செலுத்துவோம் என்ற யோசனையை முன்வைத்தோம். தற்போது சுமார் 35 நாடுகளுக்கு இலங்கையின் மதுபானங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மதுபான ஏற்றுமதி மூலம் 21 மில்லியன் டொலர் வருவாய்
மதுபான ஏற்றுமதி மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு 20 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்ததுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு 21 மில்லியன் டொலர் வருமானம் கிடைத்தது.
குறிப்பாக தென்னங்கள்ளு மற்றும் பனங்கள்ளுக்கு வெளிநாடுகளில் கிராக்கி நிலவுகிறது. அதேவேளை சைடர் பானத்தை ஏற்றுமதி செய்ய அண்மையில் அனுமதி வழங்கினோம்.
இலங்கையில் பழங்களில் தயாரிக்கப்படும் பானமாக இது பரிந்துரைக்கப்படுகிறது. இது எமது பழ உற்பத்திகளுக்கும் நல்ல வாய்ப்பு, ஏற்றுமதிக்கும் சிறந்த வாய்ப்பு. மேலும் Milk Punch என்ற பானத்தை ஏற்றுமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.