மன்னார் - கள்ளியடி பாடசாலை மாணவர்கள் போராட்டம்
மன்னார் - மடு கல்வி வலயத்திற்குட்பட்ட கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டமானது இன்றைய தினம் (07.02.2024) காலை மன்னார் - கள்ளியடி பாடசாலைக்கு முன்னால் இடம்பெற்றிருந்தது.
தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்யப்பட்டுள்ளமை மற்றும் கள்ளியடி பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்தமை ஆகியவற்றை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்
இதன்போது போராட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர் கருத்து தெரிவிக்கையில்,
“தற்பொழுது பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இன்றி கள்ளியடி பாடசாலையில் மாணவர்கள் கல்வியை தொடர்கிறார்கள்.
இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் மடு வலய கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கை மாத்திரமே" என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்ப பிரிவு மாணவர்கள் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வாறு மாணவர்கள், நியமிக்கும் ஆசிரியர்களுக்கு இணைப்பை வழங்கினால் பாடசாலை நடாத்துவது எப்படி? நிரந்தர ஆசிரியர்கள் எப்போது தருவீர்கள்? உடனடி தீர்வு வேண்டும்! கல்விக்கான உயர் அதிகாரிகளே பதில் கூறுங்கள், எமது கிராமங்களின் கல்வி அடையாளமே எமது பாடசாலை.அதை அழிக்க வேண்டாம், எமது பிள்ளைகளின் எதிர்காலம்?, ஆரம்பக் கல்வியே அஸ்திவாரமாகும், புதிய அதிபர் எங்கே? என பல்வேறு கேள்விகளுடனான பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
இதன்போது குறித்த வீதியூடாக பயணித்த மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடி உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |