கச்சதீவு விவகாரத்தில் இரு நாட்டு கடற்றொழிலாளர்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
இலங்கை - இந்திய (India) அரசாங்கங்கள் கச்சதீவு (Kachchatheevu) விடயம் குறித்து இரு நாட்டு கடற்றொழிலாளர்களையும் பாதிக்கின்ற வகையில் செயற்பட்டு வருகின்றன என தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார குற்றம் சுமத்தியுள்ளார்.
வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஏற்பாட்டில் இன்றையதினம் (29) மன்னாரில் இடம்பெற்ற கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்த கலந்துரையாடலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"1974ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதற்கு மேலாக சர்வதேச கடல் எல்லை சட்டமும் உள்ளது.
உத்தேச சட்டம்
இதனை மீறியும் சட்டத்தை மதிக்காமலும் ஒரு நாட்டு கடற்றொழிலாளர்கள் மற்றுமொரு நாட்டு கடற்படரப்பினுள் அத்து மீறி நுழைகின்றமை ஒரு பார தூரமான விடயமாகும்.
இதனால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதோடு அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், புதிதாக கொண்டு வரப்படவுள்ள கடற்றொழிலாளர்களின் உத்தேச சட்டத்தின் படி வெளிநாட்டு படகுகளையும் இலங்கை கடல் பரப்பில் வந்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பு
எனவே, குறித்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் இந்திய கடற்றொழிலாளர்கள் சட்ட ரீதியாக இலங்கை கடற்பரப்பினுள் கடற்றொழிலில் ஈடுபட கூடிய நிலை ஏற்படும்.
இப்புதிய சட்டத்தினால் எமது கடல் வளம் சிதைக்கப்படும். இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும் எமது நாட்டிற்கு ஒரு இறையாண்மை மற்றும் சுய ஆட்சி போன்றவை உள்ளன.
எனவே, இவற்றை பிற நாடுகளும் சர்வதேசமும் மதிக்க வேண்டும் என்பதையே நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |