காபூல் ஆளில்லா விமான தாக்குதல்! பகிரங்கமாக மன்னிப்புக்கோரிய அமெரிக்கா
ஆப்கானிஸ்தான் - காபூலில் டிரோன் தாக்குதலில் பலியான 10 பேரும் பொதுமக்கள் என்றும், இது ஒரு சோகமான தவறு என்றும் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில்,அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற கடந்த மாதம் 31ம் திகதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் உட்பட வெளிநாட்டினர் மற்றும் நாட்டில் இருந்து வெளியேற விரும்பும் ஆப்கான் மக்களுக்கு அமெரிக்க படைகள் உதவின.
காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து விமானங்கள் மூலம் காபூல் விமான நிலையம் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான மக்களை அனுப்பியிருந்தது.
இதற்கிடையே கடந்த 26ம் திகதி காபூல் விமான நிலையத்தை குறிவைத்து தற்கொலை படை தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தியிருந்த நிலையில், இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் உட்பட 182 பேர் பலியாகினர்.
இதற்கு பதிலாக அமெரிக்கா சிறிய ரக ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்ட பயங்கரவாதிகள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்தது.
ஆனால் இதில் பலியானவர்கள் 10 பேரும் பொதுமக்கள் என்றும் அதில் 7 குழந்தைகளும் அடங்குவர் என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் டிரோன் தாக்குதலில் பலியான 10 பேரும் பொதுமக்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகள் என்று நினைத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு விட்டதாகவும், இது ஒரு சோகமான தவறு என்றும், பொதுமக்கள் மீதான இந்த தவறான தாக்குதலுக்கு வருந்துகிறோம். இதற்கான மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.