தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம்
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல்குறியீடு என அரசியல் அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் வாராந்தம் வெளியீடு செய்யும் அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன் முழு விபரமும் வருமாறு,
இலங்கை சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை இறக்கி அதற்கு பதிலாக கறுப்புக் கொடியை ஏற்றியமைக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவத் தலைவர்கள் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையின் போது மாணவர்கள் “தாம் தமிழ் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக கூறியுள்ளனர். தேவையேற்படும் போது மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் எனத் தெரிவித்து விசாரணையின் பின்னர் மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களை விசாரிப்பதற்கு முன்னர் துணைவேந்தர், பதிவாளர் என்போரும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
அவர்கள் “இது வழமையாக நடைபெறுகின்ற ஒன்று தான்” என விசாரணையின் போது பதிலளித்துள்ளனர். மாணவர்களின் பிரச்சினை பொதுப் பிரச்சினையாக இருப்பதால் அரசியல் கட்சிகள் இதில் அக்கறை செலுத்தியிருக்க வேண்டும்.

தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த சட்டத்தரணிகள் மாணவர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்கியிருக்க வேண்டும். துரதிஸ்டவசமாக பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் இதில் அக்கறையைக் காட்டவில்லை. தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்ந்த சட்டத்தரணி மணிவண்ணன் அவரது சகோதரன் சட்டத்தரணி திருக்குமரன் ஆகியோர் மட்டும் சட்ட ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கியதுடன் பொலிஸ் நிலையமும் சென்றிருக்கின்றனர்.
சட்டத்தரணி மணிவண்ணன் “மாணவர்கள்! தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளனர”, அது அவர்களது உரிமை எனக் கூறியிருக்கின்றார். இலங்கையின் தேசியக்கொடி என்பது தமிழ் மக்களை அரச அதிகாரத்திலிருந்து அகற்றிய கொடி. ஒரு தேசிய இனம் என்ற வகையில் கொடியில் தமிழ் மக்கள் பிரதிபலிக்கப்படவில்லை.
இலங்கையின் இறமையைக் குறிக்கும் வாளேந்திய சிங்கத்திற்கு வெளியேதான் தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் குறிக்கும் செம்மஞ்சள், பச்சைக் கோடுகள் இடப்பட்டன.
தேசியக்கொடி உருவாக்கம் குழு
இதனை தேசியக்கொடி குழுவில் இருந்த செனட்டர் நடேசன் வன்மையாகக் கண்டித்தார். கொடியில் தமிழர்களும், முஸ்லீம்களும் சிங்கள தேசத்தின் எல்லைகளுக்கு வெளியே இருப்பதாகவும் அந்த இரு இனங்களையும் தடுத்து நிறுத்துவதற்காக சிங்கம் தன் வாளுடன் கண்காணித்து நிற்பதாகவும் கூறி செனட்டர் நடேசன் எதிர்ப்புத் தெரிவித்து தேசியக் கொடி உருவாக்கக் குழுவை விட்டு வெளியேறினார்.
இன்னோர் தமிழ்ப் பிரதிநிதியாக குழுவில் இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலமும் முஸ்லீம் பிரதிநிதியாக இருந்த டி.பி.ஜயாவும் கொடிக்கு இணக்கம் தெரிவித்தனர்.
1950 ஆம் ஆண்டு மாசி மாதம் 14 ஆம் திகதி தேசியக் கொடிக்குழு தேசியக்கொடி பற்றிய பரிந்துரையைச் செய்த போது செனட்டர் நடேசன் இதனை ஏற்கவும் இல்லை. கையெழுத்திடவும் இல்லை. 1950 ஆம் ஆண்டு மாசி மாதம் 15 ஆம் திகதி செனட்டர் நடேசன் இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் “தேசப்பிரிவினையின் குறியீடாக கொடி இருக்கும்” எனக் கூறினார். கடைசி நேரத்தில் செனட்டர் நடேசன் வாளேந்திய சிங்கம் இலங்கையின் இறைமையைக் குறிப்பதால் அதற்குள் தமிழ் மக்களையும், முஸ்லீம் மக்களையும், குறிக்கும் கோடுகளை இடுமாறு வேண்டினார்.
அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்ட போதே குழுவை விட்டு அவர் வெளியேறினார். 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி தேசியக் கொடியை உருவாக்குவதற்காக குழு நியமிக்கப்பட்டது.
ளு.று.சு.னு பண்டார நாயக்கா, கலாநிதி செனரத் பரணவிதான, ஜே.ஆர் ஜெயவர்த்தனா, சேர் ஜோன் கொத்தலாவல, ஜீ.ஜீ.பொன்னம்பலம், பி.பி.ஜயா, செனட்டர் எஸ்.நடேசன் ஆகியோரே குழுவில் அங்கம் வகித்திருந்தனர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் இக்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தில் கைத்தொழில் மீன்பிடி அமைச்சராக பதவி வகித்திருந்தார்.
கொடிக்கு இணக்கம் தெரிவித்து கிடைத்த பதவி
கொடிக்கு இணக்கம் தெரிவித்தமைக்கு அவர் அமைச்சராக இருந்தமை காரணமாக இருந்திருக்கலாம். இந்தக் குழு நியமிக்கப்படுவதற்கு முன்னரேயே தந்தை செல்வா சிங்களவர்களின் சிங்கம், தமிழர்களின் நந்தி, முஸ்லீம்களின் பிறை என்பவற்றை தேசியக்கொடி கொண்டிருக்க வேண்டும் என்ற பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் அதனை வழிமொழிந்தார். ஆனால் சிங்களத் தரப்பு அப்பிரேரணையை நிராகரித்தது. யாழ்ப்பாண வாலிப காங்கிரசின் முக்கியஸ்தரும் கொக்குவில் இந்து கல்லூரி முன்னாள் அதிபருமான ஹென்றி பேரின்பநாயகம் அனைத்து மதத்தவர்களும் வழிபடும் சிவனொளிபாதமலை தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.
அக்கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, கடந்த 1948 பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை சுதந்திரமடைந்த போது எந்தக் கொடியை ஏற்றுவது என்ற பிரச்சனையெழுந்தது.
அதன்போது 1835 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிவப்பு நிற பின்னணியுடன் வளேந்தியபடி இருக்கின்ற கண்டி அரசனின் சிங்கக் கொடியே தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முதலியார் சின்னலெப்பை நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார். ஏ.ஈ.குணசிங்கா அதனை வழிமொழிந்தார். பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்காவும் இதனை வரவேற்றார்.

இதனால் சிங்கக் கொடியே சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்டது. 1952 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 2 ஆம் திகதி தேசியக் கொடி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தேசியக்கொடிக்கு ஆதரவாக 51 பேர் வாக்களித்தனர். எதிராக 21 பேர் வாக்களித்தனர்.
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எதிர்த்து வாக்களித்தனர். வவுனியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.சுந்தரலிங்கமும் எதிர்த்து வாக்களித்தார்.
வவுனியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சுந்தரலிங்கம் ஒரு படி மேலே சென்று தேசியக்bகொடியை எதிர்த்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார்.
இடைத்தேர்தல் இடம்பெற்ற போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாநகர சபை மேயர் குரே வவுனியாவில் போட்டியிட்ட போதும் சுந்தரலிங்கம் பெருவெற்றி பெற்றார்.
தமிழரசுக் கட்சியின் பிரசாரம்
தமிழரசுக் கட்சி தேசியக் கொடியை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தது “தமிழ் பேசும் சமூகம் புறக்கணிக்கப்பட்ட இரண்டாம் தரப்பினருகளாக இந்நாட்டில் வாழ்கின்றனர் என்பதைப் பிரகடனப்படுத்தும் ஒட்டுக் கொடி எனக் குறிப்பிட்டது.
சுதந்திர தினத்தன்று தந்தை செல்வா தனது காரில் நந்திக் கொடியை ஏற்றி வீதிகளில் வலம் வந்தார். சுதந்திர தின நாளை கரி நாளாக அனுஸ்டிக்கும் வழக்கத்தை தமிழரசுக் கட்சி தொடங்கிவைத்தது. அன்றைய தினம் தமிழ்ப் பகுதிகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டிருந்தால் அதனை அகற்றி கறுப்புக் கொடி ஏற்றுவது ஒரு மரபாக பின்பற்றப்பட்டது.
1956 ஆம் ஆண்டு திருகோணமலைச் சந்தையில் திருமலை நடராசன் கறுப்புக்கொடி ஏற்ற முனைந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதே திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இரா.சம்பந்தன் முள்ளிவாய்க்கால் அழிப்பின் பின்னரும் சிங்கக் கொடியை தூக்கி அசைத்தார் என்பது வேறு கதை 1950 களில் தமிழரசுக் கட்சியால் தொடக்கி வைத்த மரபையே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பின்பற்றினர்.

ஆனால் தமிழரசுக் கட்சி சுதந்திரதினத்தன்று எந்தவித போராட்டத்தை நடத்தவில்லை. தேசியக்கொடிக்கு சிங்கள பௌத்த அடையாளத்தை வழங்க வேண்டும் என்பதற்காக 1972 ஆம் ஆண்டு தேசியக் கொடி மறுசீரமைக்கப்பட்ட போது கொடியின் நான்கு மூலைகளிலும் அரசமர இலைகள் பொறிக்கப்பட்டன.
தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வு வரும் வரை தமிழ் தேசிய அரசியலைத் தக்கவைப்பது அவசியம்.
இதற்கு புதிய தலைமுறையை நோக்கி வரலாற்றைக் கடத்த வேண்டும். தேசியக் கொடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது சுதந்திர தினத்தை புறக்கணிப்பது என்பன இந்த வகையிலேயே முக்கியமானதாகின்றது.
1947 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி 1833 ஆம் ஆண்டு கோல்புறுக் அரசியல் சீர்திருத்தம் முறை மூலம் கட்டி வளர்க்கப்பட்ட ஒற்றையாட்சி நிர்வாகக் கட்டமைப்பு மீண்டும் மெருகூட்டப்பட்டது.
சிங்களப் பெரும்பான்மையிடம் ஆட்சி அதிகாரம்
இந்தக் கட்டமைப்பை ஆட்சி செய்யும் அரசாங்கம் பெரும்பான்மை தேர்தல் முறையின்படி தெரிவு செய்யப்பட்டது. இது இயல்பாகவே சிங்களப் பெரும்பான்மையிடம் ஆட்சி அதிகாரம் செல்வதற்கு வழி செய்தது. தமிழ் மக்கள் ஆட்சி அதிகார கட்டமைப்பிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். இதே கட்டமைப்பு இருக்கத்தக்கதாகவே 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்கப்பட்டது.
இந்த சுதந்திரம் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டதே ஓழிய தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை. முழுமையாக பொறுப்பாட்சி சிங்களத் தரப்பிடம் வந்த பின்னர் அது உடனடியாகவே தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறையை அதிகரித்தது.

இது இரண்டு வகைகளில் இடம்பெற்றது. ஒரு பக்கத்தில் அரசு அதிகாரக் கட்டமைப்பு, அதன் அடையாளம் என்பன முழுமையாக சிங்களமயமாக்கப்பட்டது.
இதன் முதல் தெரிவு தான் தேசியக்கொடி உருவாக்கம். இது கச்சிதமாக நிறைவேற்றப்பட்ட பின்னர் 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன் வளர்ச்சியில் 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பின் மூலம் சிங்கள மொழி அரசகரும மொழி என்பதற்கு அரசியல் யாப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
தமிழ் மொழிக்கு 1958 ஆம் ஆண்டின் தமிழ் மொழி உபயோகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. எனினும் தமிழ் மொழியின் உபயோகம் ஒரு அரசியல் யாப்பு ஏற்பாடாக பொருள் கொள்ளக்கூடாது என்றும் கூறப்பட்டது.
தமிழ் மக்கள் புறக்கணிப்பு
இது சிங்கள மொழி அரசகரும மொழி என்பதற்கு அரசியல் யாப்பு அந்தஸ்தினைக் கொடுத்த யாப்பு தமிழ் மொழியின் உபயோகத்திற்கு கூட அந்த அந்தஸ்தினைக் கொடுக்க தயாரில்லாத நிலையையைக் காட்டியது. தமிழ் மக்கள் புறக்கணிப்புக்கு முக்கியச் சான்று இதுவாகும்.
இரண்டாவது குடியரசு யாப்பு ஆரம்பத்தில் தமிழ் மொழிக்கு தேசிய மொழி அந்தஸ்தினை தமிழ் மக்களின் வலுவான போராட்டம் காரணமாக வழங்கியது.
அதிகாலை இடம்பெற்ற கொடூரம்: கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இரட்டை கொலை - ஆபத்தான நிலையில் மற்றுமொருவர்...!
1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டின் மூலம் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட பின்னரே இது வழங்கப்பட்டது.
“கேட்டது தமிழீழம். கிடைத்தது தமிழ் மொழிக்கு தேசிய மொழி அந்தஸ்து” என்பதாகவே அது இருந்தது. தொடர்ந்து ஆயுதப் போராட்டம் வளர்ச்சியடைந்ததால் இந்தியாவின் தலையீட்டின் பேரில் 13 வது திருத்தத்தின் மூலமும், 16 வது திருத்தத்தின் மூலமும் தமிழ் மொழிக்கு அரசு கரும மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

இது நடைமுறைப்படுத்தப்படுவதன் சீத்துவம் நாம் எல்லோரும் அறிந்ததே! தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை, திருகோணமலை, நுவரேலியா மாவட்டங்களில் கூட மாவட்ட செயலக அரச நிர்வாக மொழியாக தமிழ் மொழி இன்னமும் வரவில்லை.
இரு மொழி நிர்வாக மொழியாக இருக்க வேண்டிய பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி மருந்துக்கு கூட இல்லை.
இன்னோர் பக்கத்தில் அரச கட்டமைப்பு சிங்களமயமாக்கப்பட்டால் மட்டும் போதாது. அது பௌத்த மயமாக்கப்பட வேண்டும் என்பதற்காக தேசியக் கொடியின் நான்கு மூலைகளிலும் அரச மர இலை பொறிக்கப்பட்டதோடு யாப்பு ரீதியாக பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானம் வழங்கப்பட்டது.
பௌத்தத்தை பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை என்றும் கூறப்பட்டது. ஏனைய மதங்களைப் பேணிப்பாதுகாப்பது அரசின் கடமை எனக் கூறப்படவில்லை.
சிங்களக் குடியேற்றங்கள் அழிப்பதற்கான முதற்கட்டம்
இரண்டாவது வகை தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பதாகும். இதற்காக முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டம் தான் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவதாகும். கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றம் பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் முழுமையாக பரீட்சித்து பார்க்கப்பட்டது.
திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்டவிரோத விவசாயக் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், புனித பிரதேச குடியேற்றம், முப்படைப் பண்ணைகளுக்கான குடியேற்றம் என அனைத்து குடியேற்ற முறைகளும் பரீட்சித்து பார்க்கப்பட்டன.
இக்குடியேற்றங்களை மையமாக வைத்து திருகோணமலை மாவட்டத்தை வில் போல வளைத்து சேருவல தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது.

கந்தளாய், மொறவேவா, கோமரன்கடவல, பதவியா, சேருவல பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து இக்குடியேற்றங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தையும், வவுனியா வடக்கு பிரதேசத்தையும் தட்டிக்கொண்டிருக்கின்றன.
வெலிஓயா பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டாயிற்று. விரைவில் வெளிஓயா பிரதேச சபை உருவாகலாம். வவுனியா வடக்கு பிரதேச சபையிலும் சிங்கள ஆதிக்கம் அதிகம். இங்கு தான் தமிழ்த் தேசியத்தை தக்கவைக்கல் மிகவும் முக்கியமாகின்றது.
அரசியல் தீர்வைக் காண்பதற்கும், ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்துவதற்கும் இந்த தக்கவைத்தல் அவசியம். தமிழ் மக்களுக்கான நியாயப்பாடுகளை தாயக மட்டத்திலும், இலங்கை மட்டத்திலும், பிராந்திய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பேசு பொருளாக்குவதன் மூலமே இதனைத் தக்க வைக்க முடியும்.
யாழ்ப பல்கலைக்கழக மாணவர்கள் இங்கே தான் முக்கியத்துவம் பெறுகின்றனர். பொறுப்புக்களை மாணவர்கள் மட்டும் சுமக்க விடுவது பொருத்தமானதல்ல. முழுத் தமிழ்த் தேசமும் சுமக்கத் தயாராக வேண்டும்.