கோட்டாபய அரசாங்கமும் வேண்டாம், ரணிலின் நிர்வாகமும் வேண்டாம்: வீதியில் இறங்கிய ஜே.வி.பி (Photo)
“நாட்டைக் குட்டிச் சுவராக்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசும்
வேண்டாம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர்
நிர்வாகமும் வேண்டாம் என மக்கள் சார்பாக தாங்கள் கோரிக்கை விடுப்பதாக”, மக்கள் விடுதலை முன்னணியினர் மட்டக்களப்பில் வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்துள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியினரின் பிரச்சாரம்
ஜே.வி.பி. யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் பிரச்சாரகாரர்களும் அதன் ஏறாவூர் அமைப்பாளர் புஹாரி தலைமையில் நேற்று மாலை ஏறாவூர் நகர கடை வீதிகளில் மக்களை விழிப்புணர்வூட்டும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வீதிகளில் கால்நடையாகச் சென்ற இக்குழுவினர் “வனப்புமிக்க தேசம் அழகான வாழ்க்கை மற்றும் அன்பு மிக்க மக்களே” என்ற வாசகத்தோடு இரு கையேடுகளை மக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.
சுனில் ஹந்துன்நெத்தியின் ஆதங்கம்
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, “கோட்டா மற்றும் ரணில் தலைமையிலான நிர்வாகத்தினால் இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளை ஒரு போதும் தீர்த்துவிட முடியாது.
அதனால் இவர்கள் ஒதுங்கிக் கொண்டு மக்களாட்சியை நிறுவுவதற்கு இடம்கொடுக்க வேண்டும். மக்களால் விரும்பப்பட்ட தலைவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே மக்கள் சார்பாக எமது கோரிக்கையாகும்.
இவர்கள் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் வரை இந்த நாட்டுக்கு விமோசனம் இருக்காது. கொள்ளையடிக்கின்ற அரசாங்கத்துக்கு உதவி அளிக்க சர்வதேச நாடுகள் மற்றும் முதலீட்டாளர்கள் முன்வர வாய்ப்பில்லை. இவர்கள் மக்களால் வெறுக்கப்பட்ட மக்கள் நிராகரித்த தலைவர்கள். இவர்களால் மக்கள் தொடர்ந்தும் வதைப்பட முடியாது.
கோட்டா ஆட்சிக்கு வரும்போது பருப்பு ஒரு கிலோ 65 ரூபாய். இப்பொழுது 535 ரூபாய், தேங்காய் எண்ணெய் ஒரு போத்தல் 160 ரூபாய் இப்பொழுது 800 ரூபாய். முன்னர் சீமெந்து ஒரு பக்கெட் 850 ரூபாய் இப்பொழுது 3200 ரூபாய்.
அதேபோன்று சமையல் எரிவாயு 1400 ரூபாய் இப்பொழுது 5200 ரூபாய். ஒட்டுமொத்தமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்திருக்கின்றன.
ஆனால் சம்பளம் அன்று கோட்டா இருக்கும்போது கிடைத்த அதே சம்பளமும் அதை விடக் குறைந்த வருமானமுமே மக்களுக்கு கிடைக்கின்றது. எனவே இந்த நிலைமையை மாற்ற வேண்டும்.” என கூறினார்.